தற்கொலை செய்யும் மனநிலையில் இருக்கிறேன்: முதலமைச்சருக்கு காவலர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு! - thirunelveli district
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: தமிழகத்தில் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர், செல்லதுரை. இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், எந்தக் காரணமும் இல்லாமல் சொந்த மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டத்திற்கு தன்னை பணியிட மாற்றியதில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்துள்ளதாகக் கூறி, தமிழக முதலமைச்சருக்கு காணொலி மூலமாக கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காணொலி பதிவில் இவர், தனது சொந்த மாவட்டம் திருநெல்வேலி என்றும், தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கும் தன்னை, எந்த காரணமும் இன்றி சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டமான தூத்துக்குடிக்கு மாற்றியதால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறினார். மேலும், இது தொடர்பாக நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
எனவே, இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும்; தன்னை மீண்டும் தனது சொந்த மாவட்டத்திலேயே பணியமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வீடியோ காட்சியில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: காத்திருப்போர் பட்டியலில் மதுராந்தகம் டி.எஸ்.பி - பின்னணி என்ன?