"ஐயோ கண் எரிகிறது.. கண் எரிகிறது" - தூத்துக்குடியில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு!
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். எலக்ட்ரீசியனான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கும் முன்னதாகவே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அருணாச்சலம் கொடுத்த புகாரின் பேரில் பசுவந்தனை காவல் ஆய்வாளர் சுரேந்தர் பணத்தை பெற்றுக் கொண்டு தன் மீது பொய் வழக்குப் போடுவதாக பாலமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இதுகுறித்து பல இடங்களில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பாலமுருகன் கூறுகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் தன் மீது பொய் புகார்களை அடுக்கும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றித் பாலமுருகன் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் தீக்குளிக்க முயன்ற பாலமுருகனை மீட்டு அவரது தலையில் தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர். தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தால் மண்ணெண்ணெய் ஊற்றிய பாலமுருகன் "ஐயோ கண் எரிகிறது... கண் எரிகிறது" என சுமார் ஐந்து நிமிடங்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கதறி அழுது புரண்டார்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே இருந்து தண்ணீர் எடுத்து வந்து அவர் மீது போலீசார் ஊற்றினர். இருந்தும் கண் எரிச்சல் இருப்பதாக கூறி கொண்டிருந்த அவருக்கு காவல் துறையினர் முதலுதவி வழங்கி விசாரணைக்காக சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Chennai Rain Effects: சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்!