கோவை குப்பைகளை அகற்றி சேவையாற்றும் வெளிநாட்டு தம்பதி! - kovai news
🎬 Watch Now: Feature Video
கோவையில் நடைபயிற்சியின் போது நடைபாதையில் உள்ள குப்பைகளை அகற்றி வரும் வெளிநாட்டு தம்பதியின் செயல் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்க நாட்டைச்சேர்ந்தவர்கள் அலெக்சன் டன்லப் - ராபர்ட் டன்லப் தம்பதி. இவர்கள் சுங்கம் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்கள் ரேஸ்கோர்ஸ் மற்றும் உக்கடம், வாலாங்குளம் சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, நடைபாதையில் கிடக்கும் பேப்பர்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற குப்பைகளை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்று குப்பைத்தொட்டியில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணி செய்து வரும் இவர்கள் கடந்த ஒரு வருடமாக கோவையில் தங்கி வருவதாகவும், தங்களுக்கு கிடைத்த நேரத்தில் சேவை மனப்பான்மையோடு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
நடைப்பயிற்சியின்போது கீழே கிடக்கும் குப்பையைக் கண்டும் காணாமலும் செல்பவர்களுக்கு மத்தியில், சமூக அக்கறையுடன் கீழே கிடக்கும் குப்பையினை சேகரித்து, குப்பைத் தொட்டியில் போட்டு வரும் இந்த தம்பதியின் செயல் வியப்படைய வைப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.