விவசாயத்தில் ஓர் புதிய முயற்சி.. உடைந்த சைக்கிளை வைத்து விவசாயம் செய்யும் தன்னம்பிக்கை விவசாயி..
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஒபுளாபுரம் கிராமத்தில் வசிப்பவர், பரிமளம். இவர் தன்னிடமுள்ள 40 சென்ட் நிலத்தை வைத்து விவசாயம் செய்யும் ஒரு சிறு விவசாயி. தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தன் தந்தை விட்டுச்சென்ற இந்த நிலத்தை வைத்துதான் தனது குடும்பம் மற்றும் பிழைப்பினை நடத்தி வருவதாகக் கூறும் பரிமளம், தன்னிடம் உள்ள 40 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்ய மாடுகள் வைத்தோ டிராக்டர் வைத்தோ உழுவதற்கு வசதி இல்லாததால் என்ன செய்வது என்று அறியாத நிலையில் தான் பரிமளத்திற்கு அந்த யோசனை தோன்றியுள்ளது.
இதனை அடுத்து உடனடியாக, தனது வீட்டில் இருந்த உடைந்த சைக்கிளை வைத்து, ஏர் கலப்பையின் அலகைக் கொண்டு சைக்கிளின் பெடல்களை கழற்றிவிட்டு, அதன் கீழ் தன் நண்பர் மூலமாக அலகைக் கொண்டு, வெல்டிங் செய்து தனது குடும்பத்தோடு இனைந்து விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளார்.
தண்ணீர் நிரப்பப்பட்ட நிலத்தில் பரிமளம் எளிதாக இந்த உடைந்த சைக்கிள் மூலமாக செய்த ஏர் கலப்பையை வைத்து தன்னுடைய 40 சென்ட் நிலத்தை உழுது, அதில் வெண்டைக்காய், கத்தரிக்காய், கீரை வகைகள் மற்றும் காராமணி, அவரை மற்றும் பூச்செடிகளை நட்டு விற்று வருகிறார். மேலும் தனது நண்பருக்கும் இதேபோல செய்து கொடுத்துள்ளார்.
உண்மையில் 40 சென்டில் பல பயிர்களை பயிரிட்டு பலன் அடைகின்றார் என்பதை நினைக்கும் பொழுது வியப்பாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற தருணங்களில் தான் விவசாயம் அழியவில்லை இது போன்ற சிறு விவசாயிகளால் விவசாயம் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது. மேலும், தமிழக அரசு இவருக்கும், இவர்போல ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உதவிகளை வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.