தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - என்ன பிராண்ட் தெரியுமா? - தேசிய நெடுஞ்சாலை
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியிலிருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது வந்தபோது, திடீரென கார் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வர ஆரம்பித்துள்ளது.
இதனை அடுத்து காரை ஓட்டி வந்த இக்பால் அஹமத் (63), உடனடியாக காரை நிறுத்தி காரில் தன்னுடன் பயணம் செய்து கொண்டிருந்த தனது குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேரை பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்டு, தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.
அதற்குள் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ, மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்ததால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் பற்றிய நெருப்பை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், கார் முழுவதுமாக பற்றி எரிந்து நாசமானது.
இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது, தீப்பற்றி எறிந்த கார் மகேந்திரா நிறுவனத்தின் வெரிட்டோ கார் என்றும்; இன்ஜின் கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய சந்தை மதிப்பின்படி, மகேந்திரா நிறுவனத்தின் வெரிட்டோ காரின் துவக்க விலை ரூபாய் 5.27 லட்சம் ஆகும். சிறிய அளவில் ஹேட்ச்பேக் போன்ற காரை வழங்குவதற்காக சப் காம்பாக்ட் வகையைச் சேர்ந்த இந்த கார் இந்திய சந்தையில் 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த கார், முன் இயந்திரம் மற்றும் முன் சக்கர இயங்கு முறையில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.