கடைமடைக்கு வந்த காவிரி நீர்.. 782 கன அடி தண்ணீர் திறப்பு! - mayiladuthurai
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம், குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி நீர், பல்லாயிரம் மைல்கள் கடந்து காவிரி கடைமடையான மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் கடந்த ஜூன் 12ஆம் முதலமைச்சர் ஸ்டாலின் மேட்டூரில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிலையில், கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு முதல் கதவணையான விக்ரமன் ஆறுகளின் தலைப்புப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கியில் நள்ளிரவு காவிரி நீர் வந்தடைந்தது.
இதனை இன்று (ஜூன் 20) அதிகாலை 3 மணியளவில் பொதுப்பணித் துறையினர் 782 கன அடி நீரை பாசனத்திற்காக திறந்து விட்டனர். மேட்டூர் அணையின் விதிகளின்படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்குச் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள் மற்றும் வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.
இதன் அடிப்படையில், அடுத்த ஓரிரு தினங்களில் பாசனத்திற்காக காவிரி நீர் பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நடப்பாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறுகிறது.