‘எங்கள சாவுக்கு கூட போக கூடாதுனு சொல்றாங்க’ - மழலைக் குரலில் மனு அளித்த 5ஆம் வகுப்பு மாணவி - நடவடிக்கை தேவை - Johnny Tom Varghese IAS
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18615625-thumbnail-16x9-f.jpg)
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் இன்று (மே 28) பொறுப்பேற்றார். இந்த நிலையில், பொறுப்பேற்றுக் கொண்ட ஜானி டாம் வா்கிஸ், பணியின் முதல் நாளே பெருங்கடம்பனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் தேவநதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றார். அப்போது அங்கு ஆட்சியரை வரவேற்பதற்காக காத்திருந்த சிறுமி ஒருவர், ஆட்சியருக்கு சால்வை அணிவித்து, தான் கொண்டு வந்த மனுவை அளித்தார்.
இதைத்தொடர்ந்து, ‘நற்பணி கழகம் வச்சிருக்கவங்க. எங்களை வாழ்வுக்கும், சாவுக்கும் போகக் கூடாதுன்னு கட்டளை இடுறாங்க; எங்க மாமா இடி விழுந்து இறந்தப்போ, அவங்களை யாரும் தூக்க கூடாதுன்னும் கட்டளை போடுறாங்க. சாவுக்கும், வாழ்வுக்கும் போகக் கூடாது. அப்டி மீறி போனா அடிப்போம்னு சொல்லி அடிக்கிறாங்க. அத நீங்கதான் சரி பன்னணும் கலெக்டர் அய்யா” என தனது மழலை குரலில் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து ஆட்சியர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து மாணவியின் விவரத்தை கேட்டறிந்தார். மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் பெருங்கடம்பனூரில் ‘நற்பணி கழகம்’ என்ற ஊர் அமைப்பில் இருந்து விலகியதால் சோமசுந்தரம் உள்ளிட்ட 3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, அந்த குடும்பங்களோடு யாரும் பேசக்கூடாது என்றும், சொந்த அண்ணன் சாவுக்குக் கூட அவர்களை அனுமதிக்காமல் 3 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நடவடிக்கை தேவை: நற்பணி இயக்கம் என்ற பெயரில் மக்களிடையே, பிரிவினையைத் தூண்டும் விதமாகவும், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளதாகவும் இந்த மழலையின் வார்த்தைகள் அழமான வலிகளைக் கொண்டது. இந்த சிறுமியின் கோரிக்கை, அப்பகுதியில் நிலவும் அவல நிலையால் தாங்கள் இருளில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு தீர்வு தரும் விதமாக, இன்று பொறுப்பேற்ற ஆட்சியர், அவர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.