ஈரோடு ஐயப்ப பக்தர்கள் சார்பில் சபரிமலைக்கு 50 டன் மளிகை பொருட்கள் அனுப்பி வைப்பு..! - etv bharat news
🎬 Watch Now: Feature Video


Published : Dec 24, 2023, 7:16 PM IST
ஈரோடு: சபரிமலை சன்னிதானத்தில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் தேவஸ்தான போர்டு நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அன்னதானத்திற்குத் தேவைப்படும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சபரிமலை பண்ணாரி அம்மன் அன்னதான அறக்கட்டளை ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு அன்னதானத்திற்குத் தேவையான 400 சிப்பம் அரிசி, 2,000 கிலோ ரவை, 2,000 கிலோ பிஸ்கட் உள்ளிட்ட மளிகை பொருட்கள், மற்றும் தக்காளி, கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் என மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 டன் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் ஆறு லாரிகள் மூலம் சபரிமலை சன்னிதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், "அன்னதான பணியில் இணைந்து பத்து ஆண்டுகளாக மளிகை பொருள், காய்கறி வகைகளை அனுப்பி வருகிறோம். சபரிமலை தேவஸ்தான போர்டு நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெற்று மளிகை பொருள், காய்கறிகள் என மொத்தம் 50 டன் பொருட்கள் சபரிமலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், நிலக்கல் தேவசம் போர்டு ஆகிய இடங்களுக்குக் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்" தெரிவித்தனர்.