பகலில் பேக்கரி வேலை, இரவில் பைக் திருட்டு: புதுச்சேரியில் கைவரிசை காட்டிய 3 பேர் கைது! - 3 arrest
🎬 Watch Now: Feature Video
Published : Jan 8, 2024, 8:51 AM IST
புதுச்சேரி: கோரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சாரம் அவ்வை திடல் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் பதிலளித்துள்ளனர்.
சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணகிரி மாவட்டம் வதராப்பள்ளியை சேர்ந்த சிவக்குமார்(20), வேலன்(32) மற்றும் போச்சம்பள்ளியை சேர்ந்த மணிகண்டன்(30) என்பதும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது.
மேலும், அந்த 3 பேரும் லெனின் வீதியில் உள்ள பேக்கரியில் தங்கி வேலை செய்து வருவதும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, கோரிமேடு, முதலியார்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 மோட்டார் சைக்கிள்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். பின்னர், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே அவர்கள் சாரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.