தேசிய மீன் வளர்ப்போர் தினம்; பூண்டி நீர்த்தேக்கத்தில் விடப்பட்ட 2 லட்சம் மீன் குஞ்சுகள்!
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளான புல்லரம்பாக்கம், சதுரங்கப் பேட்டை, மோவூர், அரும்பாக்கம், நம்பாக்கம், பங்காருபேட்டை, கொழுந்தலூர், கைவண்டூர், பாண்டூர், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தினமும் மீன்பிடிப்பின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் மீன்வளத் துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது நீர்மட்டம் 32.60 அடியாக உயர்ந்து உள்ளதால், தேசிய மீன் வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கங்காதரன் தலைமையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் மீன் குஞ்சுகளை விடுவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான 22 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 2 லட்சத்து 70 ஆயிரம் மீன் குஞ்சுகள் பூண்டி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மீன்வள ஆய்வாளர் விஜயலட்சுமி, பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ், பொதுப்பணித்துறை அலுவலர்கள், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் என பலர் இருந்தனர்.