ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு மெலிதல் நோய் சாதாரணமாக 40 வயதுக்கு மேல் ஏற்படும் நோயாகும். தற்போது இளம் வயதினரையும் பெரும்வாரியாக பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பலமணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதுஇ போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இளம் வயதினரையும் தாக்கி வருகிறது. கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் சாப்பிடாமல் இருப்பதும் இந்ந நோய் தாக்குவதற்கு காரணம். சத்தான உணவுகளை சாப்பிட்டால் இந்நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்று கூறும் மருத்துவ நிபுணர்கள் அதற்கான உணவை பரிந்துரைக்கின்றனர்.
நோய்க்கான காரணம்
எலும்பின் உறுதித்தன்மை குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
கவனமாக இருக்கவேண்டியவர்கள்
உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைவாக இருக்கும் நபர்களுக்கு அதிக அளவில் இந்த நோய் தாக்கும். தற்போது ஆண்களை, இந்த நோய் அரிதாகத் தான் தாக்குகிறது.
புகை பிடித்தல், ஒரு வாரத்துக்கு 200 மி.லி அளவை தாண்டி மது அருந்துபவர்கள், உடலுக்குத் தேவையான அளவு கால்சியம் எடுத்துக் கொள்ளதவர்கள், சூரிய ஒளி உடலில் படாமல் பெரும்பாலும் குளிர்சாதன வசதி உள்ள அறைகளிலேயே முடங்கிக் கிடப்பவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால் பரம்பரை வழியாகவும் இந்த நோய் தாக்கும்.
எந்த உணவை எடுத்துக்கொள்ளலாம்
- குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிட வேண்டும். சீஸ், தயிர், பன்னீர், ஸ்கிம்டு மில்கி பவுடர் போன்றவற்றில் கால்சியம் அதிகளவில் காணப்படுகிறது. இவற்றை சாப்பிட்டால் எலும்புகள் பலமடையும்
- பாதாம், பிஸ்தா போன்றவற்றில் தாது உப்புகள், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளதால் எலும்பு திறன் குறைவு நோயில் இருந்து தப்பிக்கலாம்
- கேழ்வரகு எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்
- வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரீஸ், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளை வலுவடையச் செய்யும்
- பேரிச்சம்பழத்தில் உள்ள கால்சியம், மாங்கனீசு எலும்புகளுக்கு வலுவூட்டும்
- துவரம் பருப்பு, உளுந்து, கொண்டக்கடலை, பச்பைப் பயறு பேன்றவை அன்றாடம் சேர்க்கவேண்டும்
- முருங்கை கீரை, பொன்னாங்கன்னி, கறிவேப்பிலை, வல்லாரை, கொத்தமல்லி போன்றவற்றில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது
- பச்சை காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும்
தீர்வு உண்டா
நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் கிடையாது. இந்த நோய் வந்தவர்கள், அதிகளவில் உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுக்களை விளையாடக் கூடாது. அதிக எடைகளைத் தூக்கக் கூடாது. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது.
எனினும், மருத்துவர் ஆலோசனைபடி சிறு சிறு எளிய பயிற்சிகளைச் செய்து வரவேண்டும். கால்சியம் அதிகளவில் எடுத்துகொள்ள வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைத்த அளவு தினமும் உண்ண வேண்டும். தினமும் சூரிய ஒளி உடலில் படுமாறு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
உணவில் கீரைகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதைப் பரிசோதிக்கும் பி.எம்.ஐ மதிப்பில் 25-ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் மட்டுமே இருக்க வேண்டும்.
என்ன தான் அனைத்து விதமான நோய்களுக்கு மருந்துகள் இல்லை என்பது விஞ்ஞான உலகில் உண்மை என்றாலும், உணவு பழக்கவழக்கங்கள் உங்களை அனைத்து விதமான நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்பதே உண்மை. எனவே, 'உணவே மருந்து' என்ற மந்திரத்தை நித்தமும் கடைபிடியுங்கள்.
இதையும் படிங்க: தினமும் 7,000 அடி நடந்தால் எமனும் அஞ்சுவான்