உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று (மே 31) கடைபிடிக்கப்படுகிறது. புகையிலைப் பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய நோய், நுரையீரல் ஆகியவை சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் இறப்பு மற்றும் அதிகப்படியான நோய்களுக்கான முக்கிய காரணங்களில் புகையிலை பயன்பாடும் ஒன்றாகும்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.35 மில்லியன் இறப்புகள் புகையிலைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்றன. அதிலும், இந்தியா புகையிலைப் பயன்பாடு மற்றும் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏனென்றால், இந்தியாவில் பல்வேறு வகையான புகையிலைப்பொருட்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்தியாவில் புகையிலையின் வடிவம் பல்வேறு விதங்களில் உள்ளது.
ஏஎம்டி பாதிப்பு: குறிப்பாக, புகையற்ற புகையிலை மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களான கைனி, குட்கா, புகையிலை, ஜர்தாவுடன் வெற்றிலை க்விட், பீடி, சிகரெட் மற்றும் ஹூக்கா ஆகியவை இருக்கின்றன. இந்நிலையில், புகையிலைப் பயன்படுத்துவதால் பார்வை இழப்பும் ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
குளோபல் அடல்ட் டொபாக்கோ சர்வே இந்தியாவின் படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 267 மில்லியன் வயது வந்தோர்கள் புகையிலையைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மேலும், ’மக்குலா’ எனப்படும் மத்திய பார்வையும் சிதைவுபடும். புகைப்பிடிப்பவர்கள், புகைப்பிடிக்காதவர்களை விட ‘வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD)’ என்ற நோயினை உருவாக்குவதாகவும் ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது. ஏஎம்டி என்பது ஒரு நபரின் மையப் பார்வையை மங்கச் செய்யும் ஒரு கண் நோயாகும்.
பார்வை இழப்பு: இதுகுறித்து மும்பை விழித்திரை மையத்தின் விட்ரோ-ரெட்டினல் அறுவை சிகிச்சை சிஇஓ அஜய் டுடானி கூறுகையில், "புகைப்பிடிப்பதால் கண்களில் எரிச்சல் உண்டாகும். ஏஎம்டி, கண்புரை மற்றும் கிளகோமா ஆகிய மூன்று கண் நோய்கள் உருவாகி, கண்களை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளிவிடும் அபாயம் உள்ளது. ஏஎம்டி நோயாளிகள் மத்தியில் ஆக்ஸிஜனேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாக்குலாவில் இருந்து லுடீன் குறைவதால் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஏஎம்டி வளர்ச்சி உருவாகிவிடும்" எனக் கூறினார்.
தொடர்ந்து ASG கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் ஆலோசகருமான டாக்டர் கணேஷ் பிள்ளை கூறுகையில், "புகைப்பிடித்தல் உங்கள் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, உங்கள் கண்பார்வைக்கு தீங்கு விளைவிக்கும். பல சந்தர்ப்பங்களில் இதற்கான தகுந்த சிகிச்சையை அதற்கான சரியான நேரத்தில் கொடுக்காவிட்டால், மிகப்பெரிய கண் பார்வை இழப்பிற்கு இது வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.
சர்க்கரை அளவு அதிகரிப்பு: இதனையடுத்து, “புகையிலையின் புகையானது கண்களைச் சுற்றியுள்ள திசுக்களையும் பாதிக்கலாம். இதனால் கண் இமைகள் மற்றும் கண்களுக்குக் கீழே வீக்கம் ஏற்படுகிறது. விழித்திரை நோய்களால் ஏற்படும் பார்வை இழப்பை முழுமையாக குணப்படுத்தமுடியாது. இதுபோன்ற பெரும்பாலான பிரச்னைகள் நிரந்தர பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும்” என புனேவில் உள்ள இன்சைட் விஷன் அறக்கட்டளையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் நிதின் பிரபுதேசாய் கூறியுள்ளார்.
மேலும், "சிகரெட்டில் உள்ள ரசாயனங்கள் உங்கள் உடலில் உள்ள செல்களுக்கு கேடு விளைவிப்பதோடு சில வீக்கத்தையும் ஏற்படுத்தும். இது செல்கள் இன்சுலினுக்கு தொடர்புபடுத்துவதை நிறுத்துகிறது. ஏனென்றால், நிகோடின் உங்களின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதனால், அவற்றை கையாள கடினமாக உள்ளது.
புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்: புகைப்பிடிக்கும் நீரிழிவு நோயாளிகள், தங்கள் ரத்தத்தைப் பராமரிக்க அதிக அளவு இன்சுலின் தேவைப்படுகிறது. இது நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், நீரிழிவு சார்ந்த ரெட்டினோபதியையும் தூண்டும்" என்றும் பிரபுதேசாய் கூறியுள்ளார்.
இருந்தாலும், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் விழித்திரை நோய்களை முறையாக கையாள முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், முதலில் "புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்" என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பார்வை இழப்பைத் தடுப்பதற்கான சில உணவு மற்றும் பழக்க வழக்கங்களையும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, வழக்கமான கண் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
பச்சைக்காய்கறிகள், பழங்கள் மற்றும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி உடல் முழுவதும் சுறுசுறுப்புடன் இயங்கும் எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்: அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு!