அருகிலிருப்பவர் யாரேனும் இருமினாலோ (அ) தும்மினாலோ அவரைக் கரோனா நோயாளியாகப் பார்ப்பதும், மளிகைக் கடைக்காரருக்கு கரோனா என்றால் நமக்கும் வந்திருக்குமோ என அச்சப்படுவதும் இப்போதெல்லாம் இயல்பாகிவிட்டது. நமக்கும் கரோனா பாதிப்பு உறுதியாவிட்டால் என்ன செய்ய? ஐயோ என்னோட கதை அவ்ளோ தானா? என்ற உயிர் பயம் தான் இதற்கெல்லாம் காரணம்.
ஒருவேளை நமக்கு கரோனா வந்தால் என்னவாகும் என்ற சிந்தனை மன அழுத்தத்தையே கொடுக்கும். அதற்குப் பதிலாக நமக்கு கரோனா வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் எனச் சிந்திக்க வேண்டும். அதற்காகவே, பிரத்யேகமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜேஷ் வக்குலாவிடம் பேசினோம்.
கரோனா அறிகுறிகள்
- வாசனையை நுகரும் திறனை இழத்தல்
- சுவையுணர் திறன் இன்மை
- மிகுந்த உடற்சோர்வு
- குறிப்பிடத்தக்கத் தசைச் சோர்வு
- மூச்சுத் திணறல்
- தலைவலி
- தலைச்சுற்றல்
- மூச்சுத்திணறல்
- கால் வலி
- எவ்வித காய்ச்சலும் இல்லாத வயிற்றுப்போக்கு
- அடிவயிற்று வலி
- அன்றாட வேலைகளைக் கூட செய்ய இயலாமை
’இதில் மூளை பாதிப்பு, நெஞ்சு வலி, மூளைக்காய்ச்சல், தண்டுவடப் பாதிப்பு ஆகியவை அதிகமானோருக்கு ஏற்படாவிட்டாலும்கூட உறுதிச் செய்யப்பட்ட அறிகுறிகள் தான்'
உங்களுக்கு அறிகுறிகள் ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும்?
கரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வருகிறது. இதில் 80 விழுக்காட்டுக்கும் மேலானோர் மிதமான அறிகுறிகளுடனோ (அ) அறிகுறியில்லாமலோ பாதிக்கப்படுகின்றனர். தோராயமாக 20 விழுக்காடு பேர் தான் தீவிரமான பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள், 5 விழுக்காடு பேர் மோசமான வகையில் பாதிப்படைகிறார்கள்.
- கரோனா அறிகுறிகள் உங்களுக்குத் தென்படும் பட்சத்தில், முதலில் சுயமாகவே உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் 3 நாள்களுக்கும் மேலாக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும்.
- கரோனா பரிசோதனைகள் மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமேச் செய்யப்பட வேண்டும். அறிகுறிகள் தென்பட்ட 5ஆவது நாளில் எடுக்கப்படும் பரிசோதனைகள் நம்பத்தகுந்ததாக இருக்கும்.
- ஒருவேளை தீவிரமான அறிகுறிகள் தென்பட்டால், எந்த இடத்தில் அறிகுறிகள் தென்படுகிறதோ அதைப் பொறுத்துதான் பரிசோதிக்க முடியும். அதாவது வயிறு, இதயம், நுரையீரல் என எந்த உறுப்பில் அறிகுறிகள் வெளிப்படுகிறதோ அதைச் சார்ந்துதான் பரிசோதனையும் அமையும்.
- கரோனா அறிகுறிகள் தென்படாதவர்கள் மருத்துவமனையை அணுக வேண்டிய தேவை குறைவுதான். அவர்கள் தங்களை சுயத்தனிமைப்படுத்திக் கொண்டு, ஏதேனும் அவசர உதவி (அ) சந்தேகம் எனில் மருத்துவரை அணுகலாம்.
- அறிகுறிகள் தென்படாதவர்கள் கட்டாயம் அதிகமான நீரை அருந்த வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த வைட்டமின் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அறிகுறிகள் தென்படாமல் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் டி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்தான உணவு வகைகளையே உண்ண வேண்டும்.
- கட்டாயமாக 10 நாள்கள் சுயதனிமையிலிருந்து உங்கள் மீது தென்படும் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும். உங்கள் மீது அதிதீவிரமான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகுங்கள். இதன் பின்னர், மருத்துவர் உங்களுடைய நிலையை ஊர்ஜிதம் செய்து மருத்துவமனையில் அனுமதிப்பார். இதையடுத்து, அடுத்தடுத்த சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, முறையான சிகிச்சை அளிக்கப்படும்.
- கரோனா உறுதி செய்யப்பட்டால் பதற்றப்பட வேண்டாம். கரோனா பாதித்த பெரும்பாலான நபர்கள் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஒருவேளை உங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் முதலில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், பிறருக்கு உங்களால் கரோனா பரவாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க:’தொற்று பரவாத வகையில் கரோனா சிகிச்சைக் கருவி’ - வடிவமைத்து அசத்திய புதுக்கோட்டை மருத்துவர்!