ஹைதராபாத்: தற்போதைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் டேட்டிங் என்பது மிகவும் இயல்பான விஷயமாக மாறிவிட்டது. தெரிந்தவர்களுடன் டேட்டிங் செல்வதைத் தாண்டி, டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தும் கலாச்சாரம் வந்தது. தொடக்கத்தில் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்காகவே இளைஞர்கள் பலரும் டின்டர், பம்பிள், ஹின்ஜ் போன்ற டேட்டிங் செயலிகளுக்குள் படையெடுத்தனர். ஆனால், பிறகு சாதாரணமாகப் பழகுவதற்காகவே அதை பயன்படுத்துவது ட்ரெண்டாக மாறியது.
இதுபோன்ற டேட்டிங்கில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், முக்கியமான ஒன்று மதுகுடிப்பது. இதை தவிர்க்கவே முடியாத பழக்கம்போல மாற்றிவிட்டனர். ஆனால், இந்த புத்தாண்டு முதல் டேட்டிங் புதிய ட்ரெண்டுகள் வந்துள்ளன. குறிப்பாக 2023ல் ட்ரை டேட்டிங்(Dry dating) மிகவும் டிரெண்டாகி வருகிறது.
ட்ரை டேட்டிங் என்பதை, மது இல்லாத டேட்டிங் என்று கூறலாம். ஜோடியாக டேட்டிங் செல்வோர் மது குடிக்காமல் பேசி பழகுகிறார்கள். இந்த பழக்கம் அண்மைக்காலமாக இந்தியர்களிடையே டிரெண்டாகி வருவதாக தெரிகிறது. இது தொடர்பாகப் பிரபல டேட்டிங் செயலியான "பம்பிள்" அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதன்படி, இந்த ட்ரை டேட்டிங், இனி வரும் காலங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 2022ஆம் ஆண்டில் இந்தியர்கள் பலரும் தங்களது மதுக்குடிக்கும் பழக்கத்தை மறுபரிசீலனை செய்கிறார்கள் என்றும், தங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக மது இல்லாத டேட்டிங்கை பின்பற்றவே முயற்சிக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
டேட்டிங்கில் மதுவை விட்டுவிட்டு, தங்களது பிரத்யேகமான ஸ்டைலில் கொண்டாட விரும்புகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பம்பிள் செயலி நாடு முழுவதும் மக்களின் கருத்துகளை சேகரித்தது. அதில், 24 சதவீதம் இளைஞர்கள் 2023ஆம் ஆண்டில் தங்களது டேட்டிங்கில் மது குடிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
தங்களுடன் டேட்டிங் வரும் பார்ட்னரைப் பற்றி எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் முழுமையாக தெரிந்து கொள்வதற்காகவே மது குடிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியதாக தெரிகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக டேட்டிங்கில் குடிக்க மாட்டோம் என 45 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பம்பிள் நிறுவனத்தின் இந்திய தகவல் தொடர்பு அதிகாரி சமர்பிதா சமதர் கூறும்போது, "கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு 'சோபர் கியூரியாசிட்டி' மற்றும் 'ட்ரை டேட்டிங்' அதிகரித்துவிட்டது. அதிகளவு மக்கள் ட்ரை டேட்டிங்கை தேர்ந்தெடுப்பதைப் பார்க்க முடிகிறது. மது குடிக்காமல் டேட்டிங் செய்வது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்வதுதான் சிறந்தது. எங்களது ஆப்பில் உள்ள அனைவரும் அவர்களது டேட்டிங் மற்றும் மதுக்குடிக்கும் பழக்கம் தொடர்பாக வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளலாம்" என்று கூறினார்.
பம்பிள் செயலியின் ரிலேஷன்ஷிப் நிபுணர் ஷாஜீன் ஷிவ்தாசானி கூறும்போது, "இந்த ட்ரை டேட்டிங் டிரெண்டில், இருவரில் ஒருவர் மது குடிக்காமல் தவிர்ப்பதை விநோதமாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அது நிச்சயமாக ஒரு உறவை முறித்துவிடாது. டிரை டேட்டிங்கில், மது இல்லாமல் இருப்பது சிரமமாகத் தோன்றினால், நடை பயிற்சி செல்வது போன்ற பிற செயல்களை தேர்வு செய்யலாம்.
இதுபோன்ற டேட்டிங்கில் காபி குடிப்பதைத் தேர்வு செய்யலாம். பூங்காவில் ஜாகிங் செய்வது, யோகா செய்வது, சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்டவற்றைத் தேர்வு செய்யலாம். உணவுத்திருவிழாக்களுக்கு செல்லலாம் அல்லது தெருவோர புதிய உணவுகளை ருசிக்கலாம்.
ஓவியக் கண்காட்சி, அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றிற்குச் செல்லலாம். உங்கள் ஊர்களில் நடக்கும் இசைக் கச்சேரிகள், கலை- இலக்கிய விழாக்களில் கலந்து கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த கலைஞர்களது நிகழ்ச்சிக்குச் செல்வதன் மூலம் ஒருவருக்கொருவர் மேலும் புரிந்து கொள்ள முடியும்" என்று கூறினார்.