சென்னை: குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எங்கள் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம் என, குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சற்றும் கவனிக்காமல் உங்களின் கடமைகளை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே பணம் சேர்க்க ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோரை நினைத்து கோவப்படுவதா? இல்லை வருத்தப்படுவதா? இன்றைய சூழலில் தனியார்ப் பள்ளியில் சேர்த்து குழந்தைகளைப் படிக்க வைக்கப் பெற்றோர் படும் பாடு இருக்கிறதே.. கேட்டால் கல்லும் கண்ணீர் வடிக்கும். அதே நேரம் இதனால் குழந்தைகளின் எதிர்காலம் முழுமையான ஆரோக்கியம் பெறுமா? எனக் கேட்டால் அது கேள்விக் குறியே.. என்னதான் செய்வது என்ன பெற்றோரின் அலைமோதலுக்கு இடையே சில விஷயங்களை அலசிப்பார்ப்போம்.
குழந்தைகளின் வாழ்க்கை முறையில் உணவுப் பழக்கம்:
உங்களது குழந்தைப் பருவத்தைச் சற்று அசை போட்டுப் பாருங்கள். காடு கரைகள், வயல் வெளிகள், தோப்புகள் என வெறும் கால்களில் சுற்றித்திரிந்தது.. ஆரோக்கியமான உணவாகக் கஞ்சி, கூழ், களி, தானியங்கள், புளியங்காய், கள்ளிப்பழம், கொடுக்காப்புளி, பனம்பழம், முந்திரிப்பழம், இழந்த பழம், நாவல் பழம், அத்திப்பழம், மாங்காய் என ஒவ்வொரு நாளும் நண்பர்களுடன் சேர்ந்து பல புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சுற்றாத இடமே இல்லை எனச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் போதெல்லாம் ஆட்டோகிராப் படத்தில் வரும் ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே பாடலை போல எல்லா இடங்களைப் பற்றிய ஞாபகங்களையும் உங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்துகொண்டே வந்திருப்பீர்கள்.
வளர்ந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவற்றை யோசிக்கும்போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது. குழந்தைகளிடம் சொல்ல எத்தனை கதைகளும், சம்பவங்களும் அதனைப் பகிர்ந்துகொள்ள ஆரோக்கியத்துடன் நீங்களும் இருக்கிறீர்கள்..அப்படியே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை முறையிலிருந்து சற்று யோசித்துப் பார்ப்போம்..
வளர்ந்த பின்னர் தற்போது நீங்கள் உண்ணும் செயற்கை உணவு முறைகளான ஃபிரைடு ரைஸ், பீட்ஸா, பர்கர், ஷவர்மா, சிக்கன் கிரில், சிக்கன் பிங்கர், பானி பூரி, பரோட்டா, காட் டாக் (hotdog), பப்ஸ் (puffs), அத்தோ ஆகிய துரித உணவுகளால் குழந்தைகளுக்குச் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வளர்ச்சி குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற நோய்களைப் பிறக்கும் முன்னரே பரிசாக அளிக்கிறோம். அப்படித் தப்பி வரும் குழந்தைகளும் அவர்களது குழந்தைப் பருவத்தில் மேற்கூறிய உணவு முறைகளின் நிறங்களாலும், சுவைகளாலும் ஈர்க்கப்பட்டு அடிமையாகிவிடுகின்றனர்.
அத்தகைய ஜங்க் புட், பாஸ்ட் புட் ஆகியவற்றில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், சுவையூட்டிகள் அவர்களது உடல் நலனுக்கு பெரும் ஆபத்தாக அமைந்து வருகிறது. இவர்களின் இந்த உணவுப்பழக்கத்தால் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆலாகி மரணத்தையும் சந்தித்து வருவதை நாம் தினசரி பார்த்து வறுக்கிறோம்.
குழந்தைகளின் வாழ்க்கை முறையில் விளையாட்டு:
நீங்கள் குழந்தையாக இருந்த காலத்தில் விடுமுறை நாட்களை எப்படிக் கழித்தீர்கள் என்பது ஞாபகம் உள்ளதா? விடுமுறையில் ஒரு நாள் கூட வீடு தங்காமல் ஊரில் உள்ள நண்பர்களையும், தெரு நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு நொண்டி, கண்ணாமூச்சி, பல்லாங்குழி, கபடி, உப்பு மூட்டை, மரமேறல், நீச்சல், பட்டம் விடுதல், ஊசி நூல் கோர்த்தல், குண்டு விளையாட்டு என புது விளையாட்டுகளை விளையாடி இருப்பீர்கள்.
ஆனால் இன்றுள்ள குழந்தைகளின் விளையாட்டு முறைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தல் சுற்றிச் சுற்றி அவர்களின் உடலையும், மன நலனையும் பாதிப்பதாகவே இருக்கிறது. படிப்பு மட்டும் முதலாக இருக்க வேண்டும் எனப் பள்ளியில் விளையாட்டுக்கான நேரத்தையே குழந்தைகளிடம் இருந்து பறித்துக்கொள்கின்றனர் சில பள்ளி நிறுவனங்கள்.
வீட்டுக்கு வந்த பின்பாவது விளையாட வெளியே செல்வார்கள் எனப் பார்த்தால், அப்போதும் ஸ்மாட்போன், டீவி, வீடியோ கேம்ஸ், லேப் டாப் ஆகியவற்றில் மட்டுமே உழன்று கொண்டிருக்கின்றனர். இதனால் உடல் பருமன், கண்பார்வை குறைபாடு, தூக்கமின்மை, தலைவலி ஆகியவற்றைச் சந்திக்கின்றனர்.
குழந்தைகளின் அறிவாற்றல்:
குழந்தைகளுக்கு பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் எளிதாகவும், விரைவாகவும் கற்றுக்கொள்ளும் திறன் உள்ளது. கராத்தே, கம்பு சுற்றுதல், கும்ஃபூ, ஜூடோ, மல்யுத்தம் போன்ற தற்காப்புக் கலைகள், நடனம், பாட்டுப் பாடுதல், இசைக் கருவிகள் இசைப்பது போன்ற கலைகள், புது மொழிகள் ஆகியவற்றை கற்றுப் புரிந்துகொள்ளும் திறன் அதிக அளவில் இருக்கும்.
இது அவர்களது வருங்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றைப் போலவே குழந்தைகள் தொழில்நுட்பத்தையும் விரைவாகக் கற்றுக்கொள்கின்றனர். பெற்றோர் தங்களது ஸ்மார்ட் பொன்களை ஒரு மணி நேரம் அவர்கள் கைகளில் கொடுத்தால் போதும் பெரியவர்களுக்கே தெரியாத பல நுட்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவும் செய்வர்.
இவற்றைப் பெருமை என நினைத்து தங்கள் குழந்தைகளைப் பற்றி அனைவரிடமும் சிறப்பாகப் பேசுவார்கள். ஆனால் தொழில் நுட்பத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அந்த அளவுக்குத் தீமைகளும் உள்ளது என்பதைப் பெற்றோர் அறிந்துகொள்வது அவசியம். ஸ்மாட் ஃபோனில் (parental control) பெற்றோர் கட்டுப்பாடு எனும் ஆப்சன் இருக்கும். இதன் மூலம் ஃபோனில் குழந்தைகள் என்ன பார்க்க வேண்டும், பார்க்கக்கூடாது என்பவற்றைத் தேர்வு செய்வதன் மூலம் அவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
ஒரு சில பெற்றோருக்கு இது குறித்த சரியான தெளிவு இருப்பதில்லை, அதனால் குழந்தைகள் ஸ்மாட் ஃபோன் உபயோகிப்பதை அவர்கள் கவனிப்பதில்லை. இதனால் அவர்கள் சிறு வயதிலேயே தேவையற்ற பல ஆபாசப் படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பார்க்கின்றனர்.
தமிழ் நாட்டில் மக்கள் பின்பற்றும் கலாச்சாரப்படி குழந்தைகளுக்குச் சிறு வயதில் உடல் குறித்த புரிதலையும், சரியான கல்வியையும் வழங்குவதில்லை. இதனால் குழந்தைகள் தங்கள் ஸ்மாட் ஃபோனில் பார்த்த செய்திகள் குறித்து யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இதனால் அவர்களது மன அமைதி பாதிக்கப்படுகிறது.
ஆனால் ஒரு சில அதிக சுறுசுறுப்பான குழந்தைகள் ஒரு விசயத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு, அவற்றை உடனே செயல்முறைப்படுத்திப் பார்க்க வேண்டும் என நினைத்து யூடியூப்களில் அவற்றைத் தேட ஆரம்பித்து ஒரு சில நல்ல விஷயங்களையும் கற்றுக்கொண்டு தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்கின்றனர். எனவே குழந்தைகளின் நடவடிக்கைகளையும், அவர்களது செயல்பாடுகளையும் கூர்ந்து கவனிப்பது பெற்றோரின் கடமையாக இருக்கிறது. இந்த குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்காக இந்த கட்டுரை.. குழந்தைகளின் பெற்றோருக்காகவும் இந்த அறிவுரை. குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் மன நல ஆலோசகர்களின் அறிவுரைப்படி இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.