சென்னை: அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தூக்கமின்மை, இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது, குறைவான தூக்கம் ஆகியவை நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மனநிலையை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்றிருந்த தூக்கமின்மை மற்றும் மனநிலை குறித்த ஆய்வுகளை மதிப்பாய்வு செய்ததில், தூக்கமின்மை மனநிலைகளை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆய்விற்காக ஆராய்ச்சியாளர்கள் 5 ஆயிரத்து 715 பங்கேற்பாளர்களுடன், 154 ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர். ஆராய்ச்சியாளர்கள் 154 ஆய்வுகளிலும் பங்கேற்பாளர்களை நீண்ட நேரம் அல்லது அவ்வப்போது தூங்கவிடாமல் விழித்திருக்க வைத்திருந்தனர். மேலும், பங்கேற்பாளர்களுக்கு வழக்கமான நேரத்தை விட குறைவான நேரமே தூங்க அனுமதித்து, பங்கேற்பாளர்களின் மனநிலையைத் தொடர்ந்து கண்காணித்து ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் காரா பால்மர் கூறுகையில், “தூக்க இழப்புக்குப் பிறகு பங்கேற்பாளர்கள் சோகமான மனநிலையைக் கொண்டிருந்தனர். தூக்கமின்மையால் பங்கேற்பாளர்களின் அறிவுக்கூர்மை பாதிக்கபட்டு, அறிவில் மந்தமாக இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். அவர்களுக்கு இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்திருந்தது” என்று தெரிவித்தார்.
மேலும் குறுகிய கால தூக்க இழப்புக்குப் பிறகு பங்கேற்பாளர்கள் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தாமதமாக எழுந்திருப்பதாகவும் பால்மர் கூறியுள்ளார். 90 சதவீத பதின்ம வயதினரும் (Teenage), 30 சதவீதத்திற்கும் அதிகமான பெரியவர்களும் போதுமான தூக்கத்தைப் பெறவில்லை என்று கூறும் முந்தைய ஆராய்ச்சியை மேற்கோள் காட்டினார்.
இந்த ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர்கள், தூக்கமின்மை மனித உணர்ச்சிகளை வெகுவாக பாதிக்கிறது என்றும், பெரும்பாலும் லாரி ஓட்டுநர்கள், விமானிகள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், துணை மருத்துவர்கள் ஆகியோரே தூக்க இழப்பு ஆளாகின்றனர் என்று கூறியுள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் 23 வயதுடைய இளைஞர்கள் என்பதால் இந்த ஆய்வு வரம்பிற்குட்பட்டது.
இதையும் படிங்க: கழுத்து வலிக்கும் - தலைவலிக்கும் தொடர்புண்டா?... - ஆய்வு என்ன கூறுகிறது!