கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கூட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ஆம் தேதி நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பணியாற்றும் முகவர்கள் விவரங்களை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
அதனடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அடிப்படையில் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதே போல கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் சேர்ந்த வேட்பாளர்களும், முகவர்களும் கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிகிறது.