டெல்லி: புகையிலையில் இருந்து பெறப்படும் ஒரு வகையான கலவை, பல்வேறு புற்றுநோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுவதாக அலகாபாத் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு ஆய்வாளர்கள் தகவல் அளித்துள்ளனர்.
அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் மலேசியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, "4-[3-Hydroxyanilino]-6,7-Dimethoxyquinazoline" என்ற ஒற்றை புற்றுநோய் எதிர்ப்பு கலவை மூலம் பல்வேறு புற்றுநோய்களுக்கான சிகிச்சை குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அந்த ஆய்வில், புகையிலையின் பச்சை இலைகளில் இருந்து பெறப்படும் ஒரு வகையான கலவை, பல்வேறு புற்று நோய்களை உருவாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். குறிப்பாக நுரையீரல், கணையம், எலும்பு மஜ்ஜை மற்றும் ரத்தம் உள்ளிட்டவற்றில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு புகையிலையின் பச்சை இலை கலவை தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதாவது, மேல்தோல் வளர்ச்சி காரணி ஏற்பி (Epidermal growth factor receptor) எனும் ஒருவகையான புரதம் மரபணுவில் பிறழ்வை ஏற்படுத்தி, புற்றுநோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. புற்றுநோய் ஆரம்பக் கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இந்த மேல்தோல் வளர்ச்சி காரணி ஏற்பி புரதம் சுரப்பதைக் கட்டுப்படுத்த மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.
இன்று வரை புற்று நோய்க் கிருமியை முழுமையாக கட்டுப்படுத்தி, அதற்கான தீர்வுக்காக உலக நாடுகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1990களுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் இந்த புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பலவற்றை தோல்வியையும் சந்தித்திருக்கிறது.
இந்நிலையில்தான் இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புகையிலையில் இருக்கும் மருத்துவ குணம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில்தான் புகையிலையின் பச்சை இலையில் இருந்து கிடைக்கும் ஒருவகை கலவை Epidermal growth factor receptor சுரப்பதை முற்றிலும் கட்டுப்படுத்த உதவும் என கூறியுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அனைத்து மருத்துவத் துறையும் 30க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த புற்றுநோய்கள் உருவாக காரணமே புகையிலைதான் என கூறி வரும் நிலையில், புகையிலையின் பச்சை இலை அந்த புற்றுநோய்களுக்கு மருந்தாகும் என்ற ஆய்வு முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வாளர்களின் இந்த ஆய்வு சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் மருத்துவ ஆய்வுகளை வெளியிடும் ஜர்னல் ஆஃப் பயோமோலிகுலர் ஸ்ட்ரக்சர் மற்றும் டைனமிக்ஸ் பக்கத்தில் வெளியாகவுள்ளது. அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளை மட்டும் வெளியிடும் இந்த தளத்தில் புகையிலையின் மருத்துவ குணம் குறித்தும் இது எவ்வாறு புற்றுநோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் என்பது குறித்தும் கட்டுரை வெளியாகவுள்ளது.
தனிப்பட்ட கவனத்திற்கு: புகையிலையின் பச்சை இலையில் இருக்கும் சில மூலக்கூறுகள் புற்றுநோய்க்குத் தீர்வாக அமையும் என்ற சோதனை ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் உள்ளது. இதுவரை அது உலக சுகாதார அமைப்பால் உறுதிபடுத்தப்படவில்லை. குறிப்பாக, உலர்ந்த புகையிலை 30க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த புற்றுநோய்களை உருவாக்கும் என்பது உறுதி செய்யப்பட்டவை. இதனால் யாரும் புகையிலை புற்று நோய்க்கான மருந்து என தவறாக நினைத்து அதைப் பயன்படுத்த வேண்டாம்.
இதையும் படிங்க: காகித ஸ்ட்ராவிலும் கலந்திருக்கும் நச்சு இராசாயனங்கள் : ஆய்வாளர்கள் கூறுவது என்ன?