சென்னை: மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ஏற்படும் வலியை கூறவே முடியாது. வலி தாங்காமல் வலுவிழந்து விடுவார்கள். அடி வயிற்று வலி, கால் வலி, இடுப்பு வலி, முதுகுத்தண்டு வலி, வாந்தி, மயக்கம், உடல் சோர்வு, மன அழுத்தம் போன்றவை ஏற்படும். இந்த வலிகளிலிருந்து மீள, சோடா போன்ற குளிர்பானங்களையும், மாத்திரைகளையும் உட்கொள்வர். இது தற்காலிக நிவாரணம் தான் இருப்பினும், பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
அவை ஆபத்தானது என்பதால் இயற்கையான முறையில் மாதவிடாய் வலிவை எவ்வாறு போக்கலாம் என்று பார்க்கலாம். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், மாதவிடாய் வலியைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றை பார்க்கலாமா.
8 மணி நேர தூக்கம்: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மகப்பேறு மருத்துவர் கெல்லி ராய், மாதவிடாய் காலத்தில் குறைவான நேரம் தூங்குவது அதிக வலியை உண்டாக்கும் என்றும், ஆகையினால் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கால்சியம் நிறைந்த உணவுகள்: மாதவிடாய் காலத்தில் தசைப்பிடிப்பு ஏற்படும். கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம்.
டீ: சிறிது இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து இஞ்சி டீயாக குடிக்கலாம். இஞ்சிக்கு பதிலாக பட்டை சேர்த்து, இலவங்க பட்டை டீயாகவும் குடிக்கலாம். இதனால் அடி வயிற்று வலியும், உட வலியும் குறையும். புத்துணர்ச்சியாக உணரலாம்.
குறைந்த நார்ச்சத்துள்ள உணவு: மாதவிடாய் காலங்களில் அதிக நார்ச்சத்துள்ள உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது வயிறு வீக்கத்தை அதிகப்படுத்தும் என்று நியுணர்கள் கூறுகின்றனர்.
நாளொன்றுக்கு 10 டம்ளர் தண்ணீர்: மாதவிடாய் காலத்தில் குறைந்த அளவிலான தண்ணீரை குடிப்பதால் நீரிழப்பு ஏற்படும். மேலும் தலைவலி, உடல் சோர்வு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவை ஏற்படும். ஆகவே ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
யோகா, தியானம்: மாதவிடாயின் போது வயிற்று வலியுடன், மன அழுத்தமும் ஏற்படும். இந்த சமயத்தில் மன அழுத்தத்திலிருந்தும், வலியில் இருந்து விடுபட யோகா மற்றும் தியானத்தில் ஈடுபடலாம்.
இதையும் படிங்க: மழைக்காலம் வந்தாச்சு! வாங்க விதவிதமாக வெஜிடபிள் சூப் செய்யலாம்...