சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி என பண்டிகைகள் வரிசையாக வரவுள்ளன. புத்தாடை, பட்டாசு என கோலாகலமாக கொண்டாடவுள்ள பண்டிகை நாட்களில் முக்கியமான ஒன்று பலகாரங்கள். ஜிலேபி, லட்டு, மைசூர்பா, பால்கோவா உள்ளிட்ட பல இனிப்பு வகைகள் மற்றும் மிக்சர், பூந்தி, காரா சேவா, முறுக்கு உள்ளிட்ட பல எண்ணெய் பலகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நம் தாத்தா, பாட்டி காலத்தில் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயாரிப்பார்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் அவ்வளவு சிரமப்பட யாருக்கும் நேரமும் இல்லை மனமும் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் பலர் கடைகளில் விற்கும் பலகாரங்களை வாங்கி பண்டிகை நாட்களை கொண்டாடுவார்கள். அவர்களுக்குதான் இந்த தகவல்..
பண்டிகை நாட்களை குறிவைத்து நடக்கும் மோசடி; பண்டிகையை கொண்டாட நாட்களை எண்ணி நாம் காத்திருப்பதுபோல், பழைய எண்ணெய் மற்றும் தரமற்ற பொருட்களை வைத்து பலகாரங்கள் தயாரித்து அதை வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட பலர் காத்திருக்கின்றனர். பண்டிகை நாட்களை குறிவைத்து நடைபெறும் இதுபோன்ற தரமற்ற உணவு மோசடியில் இருந்து நம்மையும், நம் உறவுகளின் ஆரோக்கியத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டும். அதற்காக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலாகவும் உள்ளது.
அரசு அதிகாரிகள் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை; கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பண்டிகை நாட்களில் பலகாரங்களை தயாரிக்கவும், அதை விற்பனை செய்யவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அவை;
- ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயில் வேறு பலகாரங்களை தயாரிக்கக்கூடாது
- பலகாரங்களில் அனுமதிக்கப்பட்ட நிறமிகளை மட்டுமே சேர்க்க வேண்டும்
- தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிடக்கூடாது
- தரமான மூலப் பொருட்களைக் கொண்டு மட்டுமே பலகாரங்களை தயாரிக்க வேண்டும்
- பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாக இருப்பு வைக்க வேண்டும்
- மூலப்பொருட்கள், உபயோகத்திற்கான கால கெடு உள்ளிட்ட அனைத்தும் பேக்கிங்கில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்
- தூய்மையான குடிநீரைக் கொண்டே அனைத்தும் தயாரிக்கப்பட வேண்டும்
உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்; பண்டிகை காலங்களில் கடைகளில் சென்று நீங்கள் பலகாரங்களை வாங்கும் போது உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்ற நிறுவனமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், பேக்கிங் செய்யப்பட்ட பலகாரங்களில் அதன் முழுமையான விவரம் அடங்கிய சீட்டு அச்சிடப்பட்டிருந்தால் மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள்.
அது மட்டும் இன்றி, இது தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் Google Play Store ல் இருந்து உணவு பாதுகாப்பு செயலியான tnfoodsafety consumer App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் புகார் தெரிவிக்கலாம்" என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாம்பிள் பாத்து வாங்குங்க; பலகாரக்கடைகளில் சென்று இனிப்பு அல்லது காரத்தை வாங்கும்போது, நீங்கள் வாங்க நினைக்கும் பலகாரத்தை கொஞ்சம் எடுத்து சுவைத்து பாருங்கள். இதில் சிக்கு வாடை உள்ளதா? அல்லது நிறமிகள் நாக்கில் அதிகம் படிகிறதா? உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ளலாம்.
சுவையில் சிறிய வித்தியாசம் இருந்தால் அந்த பொருளை தவிர்க்கவும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விட பேக்கிங் செய்யப்படாமல் இருக்கும் பொருட்களை சுவைத்து பார்த்து வாங்குவது நல்லது. அந்த பலகாரங்கள் ஈ மற்றும் எறும்பு அண்டாத வகையில் சுத்தமாக பாதுகாக்கப்படுகிறதா எண்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
விற்பனை செய்யப்படும் இடங்களில் கை உறை மற்றும் தலையுறை அணிந்துள்ளார்களா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். பால் பொருட்களால் தயாரிக்கப்படும் பலகாரங்கள் மற்ற உணவு பண்டங்களுடன் சேர்க்காமல் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் பண்டிகை நாட்கள் சிறக்க, தரமான பலகாரங்களை வாங்கி மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்.
இதையும் படிங்க: அதிரடி ஆஃபர்களுக்கு நடுவே பதறவைக்கும் மோசடிகள்.. பண்டிகை பர்சேஸில் கவனம் தேவை..!