மனிதன் ஒரு சமூக விலங்கு. ஆனால் ஓய்வின்றி ஓட வேண்டிய தற்கால வாழ்க்கை முறையும், தொழில்நுட்பமும் மனிதர்களை ஆக்கிரமித்து, அவர்களது எண்ண ஓட்டங்களை அதிகரித்து, தனிமையில் ஆழ்த்தியுள்ளது. வளர வளர தன் அன்றாட உணர்வுகளை குடும்பத்தினரிடம்கூட வெளிப்படுத்தாமல், சக மனிதர்களிடமிருந்தே தனிமைப்படுத்தப்பட்டு, பொருள் தேடி ஓடும் நிலைக்கு காலம் மனிதர்களைத் தள்ளி விடுகிறது. இவற்றின் வெளிப்பாடே மன அழுத்தம், மனச் சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள்.
இந்நிலையில், ஒருவர் தன்னுடைய உணர்வுகளை பிறருடன் பகிர்ந்து வருவதும், தான் மனதில் நினைப்பதை வெளிப்படுத்தி வருவதாலும் மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்களை எதிர்த்துப் போராட முடியும் என்று மேற்கு வங்கத்தின் பிரபல மனநல மருத்துவர் தேவி பிரசாத் ராய்சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மக்கள் அனைவரும் முதலில் சமூக ரீதியாக பின்னிப் பிணைந்திருக்க வேண்டும், தாங்கள் நினைப்பதை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ள நண்பர்கள், உறவினர்கள் அல்லது நெருங்கிய நபர்களைக் கொண்டிருக்க வேண்டும். இது ஒரு விதத்தில் தற்கொலைக்குத் தூண்டும் எண்ணங்களைக் குறைக்கும்.
இந்தக் கரோனா ஊரடங்கின் மத்தியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலையின்மை அதிகரித்துள்ளது. இதனால், பலர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. வயதானவர்களும்கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். தனிமையாக உணர்வதை தற்கொலைக்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற மருத்துவர் அருணவ் சென்குப்தா மனச்சோர்வைத் தவிர்ப்பது குறித்து கூறுகையில், "பரம்பரையில் கடத்தப்படும் நோய்களில் தற்கொலையும் அடங்கும். இந்த உலகில் வலிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பல மனிதர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மனச்சோர்வு ஏற்பட்டால் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியம். தற்கொலை எண்ணங்களைத் தவிர்க்க சமூகமயப்படுதல் மிகவும் முக்கியம். பிற நோய்களைப் போலவே மனநோயை எளிதில் நாம் புறக்கணித்து விடுகிறோம். இது மிகவும் தவறு. மனநோய்க்கு முன்னுரிமை அளித்து அதற்கான சிகிச்சையை உடனடியாகப் பெற வெண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது, இசையை ரசிப்பது, ஆன்மீகத்தில் லயிப்பது, புத்தகங்கள் வாசிப்பது ஆகியவை மனச்சோர்வை எதிர்த்துப் போராட பெரும் உதவியாய் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் மேலோங்குவது குறித்து பேசியுள்ள அசன்சோல் பொறியியல் கல்லூரியின் மாணவர் ஸ்ருஜா பானர்ஜி "போட்டித் தேர்வுகளில் தோல்வியடைந்தால் மாணவர்கள் தற்கொலையைத் தேர்வு செய்கிறார்கள். தோல்விகளை ஏற்கும் மனப்பக்குவம் குறித்த சரியான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். முயற்சியை ஒருபோதும் கைவிடாத மனப்பான்மையை அவர்களுக்குள் வளர்த்தெடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கட்டாய உறவு கொள்ளுதல் பெண்களின் மனநலனைப் பாதிக்குமா?