கரோனா தொற்று பரவத் தொடங்கிய காலம் முதல் சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி அசுர வேகத்தில் விற்பனையானது.
அதுவும் ஆல்கஹால் இருக்கும் கிருமி நாசினிதான் கைகழுவ மிகவும் உகந்தது என்று கூறப்பட்டது. இருப்பினும் கிருமி நாசினியைவிட சோப்பினால் கைகளை கழுவினாலே போதும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுகாதார நிபுணர்கள் கிருமி நாசினியை காட்டிலும், சோப்பு, தண்ணீர் கொண்டு கைகளை கழுவுவது சிறந்தது என்று தெரிவிக்கின்றனர்.
சோப்பு, தண்ணீர் இல்லாத பட்சத்தில் நாம் ஆல்கஹால் இருக்கும் கிருமி நாசினியை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கவோ அல்லது தடுக்கவோ இதுவரை எந்த மருந்தும் இல்லை (கிருமி நாசினி உள்பட ) என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration) தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், காய்ச்சல் வருவதை தவிர்க்கவும் சோப்பு, தண்ணீர் கொண்டு 20 வினாடிகளுக்கு கை கழுவினால் போதும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention) குறிப்பிட்டுள்ளது.
உணவு உண்பதற்கு முன், மலம் கழித்த பிற்பாடு, இரும்பல், தும்பல், சளி சிந்திய பிறகு கை கழுவுதல் வேண்டும். சோப்பு இல்லாத நேரத்தில் 60% எத்தனால் (Ethanol) கொண்ட ஆல்கஹால் இருக்கும் கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும்.
இதை மட்டும் தவிர்த்திடுங்க?
நாம் வீட்டிலேயே செய்துகொள்ளும் DIY (Do it yourself) சானிடைசரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நன்கு தரமான சானிடைசர்கள் விலை அதிகமாக இருக்கும் காரணத்தினால் நம்மில் சிலர் சில வீடியோக்களை பார்த்து சானிடைசரை மலிவான விலையில் வீட்டிலேயே செய்துகொள்ளலாம் என நினைத்து வினையை விலைக்கு வாங்கிவிடுவோம். அப்படி மட்டும் செய்துவிடாதீர்கள் நண்பர்களே.
சில வேளைகளில் தவறான மூலப்பொருள், அல்லது தவறான அளவில் மூலப்பொருளை பயன்படுத்திவிட்டால் அது விபரீதத்தில் முடிந்துவிடும்.
நம் தோலுக்கு தீங்கை விளைவித்துவிடும். அதற்கு மாற்றாக சாதாரண சோப்பினால் கைகளை கழுவுங்கள். வேலை முடிந்தது.
கரோனா பீதியில் மக்கள் சேனிடைசர்களை குடிக்கும் செய்திகளை நாமும் அவ்வப்போது காண்கிறோம். ஒரு சிலர் முகத்தை மூடும் முகக் கவசங்களை கிருமி நாசினி கொண்டு கழுவுகின்றனர். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கிருமி நாசினியில் சில கெமிக்கல்களால் விஷத்தன்மை இருக்கும்.
ஒருவேளை கிருமி நாசினி கொண்டு முகக் கவசத்தை கழுவினால் அதில் இருக்கும் விஷம் நாம் சுவாசிக்கும்போது நம் இரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி கழுவிவிட்டாலும் 48 மணி நேரத்திற்கு அதை தொடக்கூடாது.
இதை தவிர்க்க டிடர்ஜென்டைகொண்டு முகக் கவசத்தை சுத்தம் செய்வதே போதுமானது.
இதையும் படிங்க... தங்கம், வெள்ளி முகக் கவசம்: ஆடம்பர விழிப்புணர்வில் நகைக்கடை உரிமையாளர்!