கரோனா தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்ததிலிருந்து மக்கள் பலரும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தொடர்ந்து சில நாள்கள் கழித்து இரண்டாம் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இந்த இரண்டு டோஸ்களுக்கும் இடையில் ஓர் குறிப்பிட்ட கால இடைவெளி உள்ளது. அது ஏன் என்பதை அறிந்துகொள்ள நமது ஈடிவி பாரத் குழு ஹைதராபாத் விஐஎன்என் மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் ராஜேஷ் வுக்கலாவை சந்தித்து பேசியது. அவருடனான உரையாடல் பின்வருமாறு:
இரண்டு டோஸ்களுக்கு இடையிலும் ஏன் இந்த கால இடைவெளி?
கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொள்ளும்போது நம் உடலில் ஆண்டிபாடிகள் உற்பத்தியாகும். இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளும்போது கூடுதல் ஆண்டிபாடிகள் உற்பத்தியாகி தொற்றை எதிர்த்துப் போராடுகின்றன.
இரண்டு டோஸ்களுக்குமான கால இடைவெளி என்ன?
இந்தியாவில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ஆஸ்ட்ராஜென்காவின் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியின் கால இடைவெளி 28 நாள்களாகும். கோவிஷீல்ட் தடுப்பூசியின் கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் கால இடைவெளி நான்கு முதல் எட்டு வாரங்கள் ஆகும்.
என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்?
உடலில் ஏதாவது பாதிப்பு இருக்குமாயின் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னதாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.
உடலில் நீர்ச்த்து இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் தடுப்பூசி போட்டுக்கொண்ட இடத்திலேயே 30 நிமிடங்கள் இருக்கவேண்டும். ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
பல்வேறு மக்களும் பாதுகாப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அந்தந்த மாவட்ட அரசுகள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதன்படி கரோனா தடுப்பூசி காரணமாக ஏற்படும் பக்க விளைவுகளுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தடுப்பூசி போட்டவுடன் சிலருக்கு பொதுவான பக்க விளைவுகள் ஏற்படலாம். அதன்படி பாராசிட்டமாலை மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள். மருந்து எடுத்துக்கொண்ட பின்பும் கரோனா அறிகுறிகள் தொடர்ந்தாலோ அல்லது வித்தியாசமாக பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால் நம் வழியாக பிறருக்கும் தொற்று பரவலாம்.
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் தேவகௌடாவுக்கு கோவிட்-19 பாதிப்பு