நவம்பர் 24, 2021 அன்று, தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆய்வாளர்கள், உருமாறிய புதுவகை கோவிட்-19 தொற்றை கண்டறிந்தனர்.
கரோனா வைரஸின் பிற வகைகளில் காணப்பட்டதை விட, அதிக எண்ணிக்கையிலான உருமாற்றங்களை கொண்டதாக, புதிய வகை கரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக பதிவுசெய்தனர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பு (WHO) ஒமைக்ரான் என்று அதற்கு பெயர் சூட்டி, இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது என்று எச்சரிக்கை விடுத்தது. இந்த அறிவிப்பு பல நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வழிவகுத்தது.
உருமாற்றம் என்றால் என்ன?
அனைத்து வைரஸ்களும் உருமாறும் தன்மை கொண்டது. அதேபோல, கரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தோன்றியதிலிருந்து தொடர்ந்து உருமாற்றம் கண்டு வருகிறது. ஒரு உருமாற்றம் என்பது, வைரஸின் மரபணு குறியீட்டில் ஏற்படும் மாற்றமாகும். இந்த உருமாறிய வைரஸ்கள், தனித்தனியாக வகைப்படுத்தப்படுகின்றன.
சில கரோனா வைரஸ் மாறுபாடுகள், மற்றதை விட எளிதாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளன. இது நோய்த்தொற்றின் விகிதத்தை அதிகரிக்க வழிவகுத்து, தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மரணங்களை ஏற்படுத்தவும் காரணமாக அமைகிறது.
புதிய மாறுபாட்டில், குறைந்தது 50 உருமாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஒமைக்ரான் வகை கரோனா வைரஸில், மனித உயிரணுக்களில் நுழையும் பகுதியான ஸ்பைக் புரதத்தில் 32 உருமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
- புதிய மாறுபாட்டில், குறைந்தது 50 உருமாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்
பிற வகைகளை இதனுடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வகை, உடலில் வலுவற்று இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் நுழைந்து, அதனை எளிதில் தகர்க்ககூடிய வல்லமை கொண்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உருமாற்றங்கள் D614G போன்ற எழுத்துக்கள் மற்றும் எண்களால் அடையாளம் காணப்படுகின்றன. அதாவது வைரஸ்கள் ஸ்பைக் புரதங்களின் நிலை எண் 614 இல் டி (அஸ்பார்டேட்) இலிருந்து ஜி (கிளைசின்) ஆக மாறும்.
வைரஸ் வகைகளுக்கு பெயர் வந்தது எப்படி?
உலக சுகாதார அமைப்பு 13 கரோனா வைரஸ் வகைகளை அடையாளம் கண்டுள்ளது. மே 2021 முதல், அவைகளை ஆல்பாவில் தொடங்கும் கிரேக்க எழுத்துக்களைக் கொண்டு பெயரிடப்பட்டன.
இதன்படி, அடுத்த ஒதுக்கப்பட்ட எழுத்துக்கள் Nu, Xi ஆகவே இருக்க வேண்டும். ஆனால், வைரஸ் வகைப்படுத்தலுக்கு, இது வேறு விதத்தில் குழப்பத்தைத் தரும் என்று நினைத்த மருத்துவ ஆய்வாளர்கள், அதற்கு பதிலாக, ஒமைக்ரான் என்ற 15ஆவது எழுத்தை பயன்படுத்தி புதிய வகைக்கு பெயரிட்டனர்.
ஓமிக்ரோன் மற்ற வகைகளுடன் எவ்வாறு வேறுடுகிறது
ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்றினால் ஆபத்து "மிக அதிகம்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. டெல்டா வகை, அக்டோபர் 2020ஆம் ஆண்டு, இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. இது அந்த சமயத்தில் இருந்த வைரஸ் வகைகளில் மிகவும் வீரியமிக்க மற்றும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது.
இச்சூழலில், தற்போது பரவிவரும் உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் வகை, அதிகமாக பரவக்கூடியதாகவும், மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கிறது உலக சுகாதார அமைப்பு. அதேசமயத்தில், இது குறித்த தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை என்று பின்னங்கால் வைத்துள்ளது.
- அதேசமயத்தில், இது குறித்த தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை என்று பின்னங்கால் வைத்துள்ளது
தென் ஆப்பிரிக்கா தொற்றுநோயியல் நிபுணர் சலீம் அப்துல் கரீம் கூறுகையில், ஒமைக்ரான் குறித்து தரவுகள் இன்றி எதுவும் தெரிவிக்கமுடியாது என்றும், வீரியம் அதிகம் இருக்கும்பட்சத்தில், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு அதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றும் கூறியுள்ளார்.
வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி
உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், கோவிட்-19 பரவுவதைத் தடுக்கவும், பின்வரும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.
- தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்
- முகக்கவசம் அணியுங்கள்
- தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும்
- இருக்கும் இடத்தினை காற்றோட்டத்துடன் வைக்கவும்
- நல்ல சுகாதாரத்தை பேணுங்கள்
- அறிகுறிகள் தோன்றினால் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்
இதையும் படிங்க: அதிகரித்து வரும் ஒமைக்ரான்: நம் மன நலனை பேணிக் காக்க சில எளிய வழிகள்!