இந்தியாவில் கரோனா நோய் தொற்றுக்கு எதிராக ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க, தடுப்பூசி முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகள் இரண்டு டோஸ் என்ற அளவில் சீரான கால இடைவெளியில் போடப்படுகிறது.
தடுப்பூசிகள் கரோனா வைரஸிற்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது. ஆனால், எதிர்ப்பாற்றால் எவ்வளவு காலம் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதற்கு பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி முழுமையாக செலுத்திய ஆறு வாரங்களுக்குப் பிறகு, அதன் நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்குவதாகவும், 10 வாரங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலாகக் குறைய வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வில் தெரியவந்தது.
அஸ்ட்ராஜெனெகாவின் புதிய மருந்து
இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா தனது மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் AZD7442 என்று சொல்லக் கூடிய புதிய மருந்து கரோனாவிற்கு எதிராக நல்ல பயனளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நோயாளிகளிடமிருந்து ஆன்டிபாடி மருந்துகள் எடுக்கப்பட்டு, ரத்த மாதிரிகளும் சேகரித்து லேப்பில் வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒரு டோஸ் AZD7442 மருந்து 12 முதல் 18 மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்று தெரிகிறது.
இந்த ஆய்வு 18 வயதிற்கு மேற்பட்ட 822 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் அஸ்ட்ராஜெனெகாவால் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் யாரும் இதுகுறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
யார் செலுத்திக்கொள்ளலாம்?
கரோனா தொற்றிற்கு எதிராக உடனடி நோய் எதிர்ப்புச் சக்தி தேவைப்படுபவர்களுக்கு AZD7442 மருந்து பயனுள்ளதாக இருக்கும்.
நோய் அறிகுறி தென்பட்ட ஆரம்ப நிலையில், இந்த மருந்தைக் கொடுக்கலாம். பொதுவாக ஆன்டிபாடி சிகிச்சை முறை விலை உயர்ந்ததாக இருக்கும். AZD7442 மருந்தின் விலை குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: எச்சரிக்கை மக்களே! ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மூட்டுநோய்களுக்கு முக்கிய காரணமாம்!