ஜெனிவா: இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 92 நாடுகளில் 35,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 20 விழுக்காடு பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 7,500 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன. குறிப்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே குரங்கம்மை வேகமாக பரவிவருகிறது. உலக நாடுகள் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும். தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
குரங்கம்மைக்கான தடுப்பூசிகள், மருத்துகளின் செயல்பாடுகள் குறித்த தரவுகள் நம்மிடம் குறைவாகவே உள்ளன. இந்த தொற்று பாதிப்புகளுக்கு பெரியம்மை தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரியம்மை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, குரங்கம்மைக்கு பயன்படுத்தப்படும் தற்போதைய தடுப்பூசி 100 விழுக்காடு பயனளிக்காது என்பது புலனாகிறது. குரங்கம்மையின் குறித்து பயப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
குரங்கம்மை தொற்று விளக்கம்: குரங்கம்மை ஒரு வகை வைரஸ் தொற்றாகும். இதனால் லேசான பாதிப்புகள் மட்டுமே ஏற்படும் என்றாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பெரியம்மையை போலவே இந்த தொற்று 14 முதல் 21 நாள்களில் தானகவே குணமாகிவிடும். ஆரம்பக் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி அறிகுறிகள் தென்படும். பின்னர் தீவிர காய்ச்சலாக உருமாறி உடல் முழுவதும் தடிப்புகள், கொப்புளங்கள் ஏற்படும். இதற்கு அடுத்த கட்டம் மிகவும் ஆபத்தானது. உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
குரங்கம்மை எப்படி பரவுகிறது: குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருக்கு எளிதாக பரவாது. ஆனால், குரங்கம்மை பாதிக்கப்படோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்போருக்கு எளிதாக பரவிடும். அதாவது தோலில் ஏற்பட்ட கொப்புளங்கள், மூச்சுக் குழாய், வாய், மூக்கு, கண்கள், பிறப்புறுப்பு உள்ளிட்டவைகள் துளைகள் மூலம் குரங்கம்மை தொற்று பரவுகிறது. குறிப்பாக பாலியல் ரீதியாக தொடர்பின்போது எளிதாக பரவும் தன்மை கொண்டுள்ளது.
பாலியல் தொடர்புகளின் போது குரங்கம்மை தொற்று மிக எளிதாக பரவிவிடும். குறிப்பாக உடலுறவின்போது ஒருவருக்கொருவர் வாய்வழி, உடல்வழி தொடுதல் மற்றும் பிறப்புறுப்பு, விந்தணுக்கள், லேபியா, ஆசனவாய் தொடுதல் மூலம் குரங்கம்மை பரவும். அதேபோல உடலுறவு அல்லாமல் கட்டிப்பிடித்தல், மசாஜ் செய்தல், முத்தமிடுதல் போன்ற தொடர்பும் தொற்றுக்கு வழிவகுக்கும். அதோடு தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்திய பெட்ஷீட், துண்டு, தலையணை, ஆடைகள் உள்ளிட்டவை மூலமும் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
ஆணுறை பயன்படுத்துவது தொற்றை தடுக்குமா...? இந்த தொற்று கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், பாதிக்கப்பட்டோரின் உடைகள், பொருள்களை பயன்படுத்துதல் மூலமே பரவும் என்பதால், ஆணுறை பயன்படுத்துவது முற்றிலும் பயனற்றது. ஆகவே, பாதிக்கப்பட்ட ஒருவரை தனிமைப்படுத்தல் மிக முக்கியமானதாகும். கரோனா தொற்றுக்கு பிறகு மீண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போலவே முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவயை மக்கள் பின்பற்ற வேண்டும். லேசான காய்ச்சல், திடீர் உடல் வலி, தலைவலி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக உடல்நிலை சரியில்லாத நேரத்தில் உடலுறவில் ஈடுபடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச அவசர நிலையாக குரங்கம்மை நோய் அறிவிப்பு