லண்டன்: தூக்கமின்மை அல்லது சீரற்ற தூக்கத்தால் மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஜெர்மனியின் RWTH பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உள்பட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு நடத்தியது. இதில், 19 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட 134 தன்னார்வலர்களின் எம்ஆர்ஐ தரவுகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வறிக்கை நியூரோ சயின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரே ஒரு நாள் இரவு தூக்கத்தை இழப்பதால், மூளையின் வயது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது, மூளையின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும், மூளை வயதான தோற்றத்தைப் பெறுகிறது என தெரியவந்துள்ளது. அதேநேரம் பகுதியளவு தூக்கத்தை இழப்பதால், மூளையின் வயதில், தோற்றத்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஈவா மரியா எல்மென்ஹார்ஸ்ட் கூறும்போது, "24 மணி நேரத்திற்கும் மேலாக தூங்காமல் இருப்பதால், மூளையின் வயது அதிகரிக்கிறது. மூளையின் உருவ அமைப்பு வயதான தோற்றத்திற்கு மாறுகிறது. இரவு முழுமையாக உறங்குவதன் மூலம் மூளையின் இந்த வயதான மாற்றங்களை சரி செய்யலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எங்களது ஆய்வு, தூக்கமின்மையால் மூளையின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக புதிய தரவுகளை வழங்கியுள்ளது" என்று கூறினார்.
ஒரு நாளைக்கு 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை தூங்குபவர்களிடம், மூளையில் வயதான தோற்றம் ஏற்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அதேநேரம், சீரற்ற தூக்கம் மூளையின் வயதான நிலையை அடைவதை துரிதப்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்தனர்.