சென்னை: நாள் தோறும் காலையில் எழுந்தவுடன் மணக்க மணக்க காபி போட்டு ஒரு நியூஸ் பேப்பரை கையில் எடுத்துப் படித்துக்கொண்டே ருசித்தபடி நிம்மதியாக அமர்ந்து காபி குடித்தால் அடடா அப்படி இருக்கும். அந்த நாள் முழுவதும் ஒரு புத்துணர்ச்சியுடன் பணிகளை மேற்கொள்ள ஒரு உத்வேகம் பிறக்கும் எனப் பலரும் சொல்லிக் கேட்டிருப்போம்.
ஆனால் அந்த காபி நமக்கு மட்டும் அல்ல நமது வீட்டில் உள்ள செடிகளுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பையும் தரும் என்றால் நம்ப முடிகிறதா? இந்த காபியை நம் வீட்டில் உள்ள செடி, கொடிகளின் நலனுக்காக எப்படிப் பயன்படுத்தலாம்? இதனால் கிடைக்கும் பலன் என்ன? எனப் பார்க்கலாம்.
காபியில் உள்ள சத்துக்கள்; காபியில் அதிகப்படியான நைட்ரஜன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளன. மேலும் அதில் காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த காபியை மனிதர்கள் எடுத்துக்கொள்ளும்போது, உடல் எடை குறைப்புக்கும், புத்துணர்ச்சி பெறுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
ஆனால் அதை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதேபோல இந்த காபியைச் செடிகளுக்கு வழங்கும்போது அவை தளதளவென வளர்ந்து இலைகள் அடர் பச்சை நிறத்துடன் காணப்படும். இதனால் செடிக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க:Turmeric Health Benefits in tamil:அஜீரண பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இனி வீட்டிலிருந்தே சரி செய்யலாம்!
இந்த காபியைச் செடிகளுக்கு எப்படி வழங்குவது.?ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள், அதை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் காபி பொடி சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து உங்கள் வீட்டில் உள்ள செடிகளுக்கு ஸ்ப்ரேயர் மூலம் தெளித்து விடவும். இதை அடிக்கடி செய்துகொண்டே இருங்கள். செடி ஆரோக்கியமுடன் வளர ஆரம்பிக்கும். முட்டை மற்றும் காபி பொடியின் அளவை உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளின் எண்ணிக்கையைப் பொருத்து அதிகரித்துக்கொள்ளுங்கள்.
காபி வெறும் உரம் மட்டும் அல்ல... உங்கள் வீட்டில் உள்ள செடி, கொடிகளுக்குச் சிறந்த கிருமி நாசினியும் கூட; அதற்காக என்ன செய்ய வேண்டும் என்றால். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் காபி பொடியைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவையும் கலந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் உங்கள் வீட்டுச் செடிகளுக்கான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி தயார். இந்த கலவையை ஸ்ப்ரேயர்கள் மூலம் செடிகள் மீது தெளித்துக்கொடுங்கள். இது பூஞ்சை எதிர்ப்பு மருந்தாக மட்டும் அல்லாமல் எறும்புகள், கொசுக்கள், பூச்சிகள் வருவதையும் தடுக்கும்.
காபி செடிகளின் வளர்ச்சியைக் குன்றச்செய்யுமா? சில ஆய்வுகள் காபி பொடியைச் செடிகளுக்கு அதிக அளவு அடிக்கடி உரமாகவோ அல்லது பூச்சிக்கொல்லியாகவோ பயன்படுத்தும்போது ஆரம்பத்தில் நன்மை அளிப்பதுபோல் காணப்பட்டாலும் காலப்போக்கில் செடிகள் மலட்டுத் தன்மை அடைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.. காபியை மனிதர்கள் எப்படி அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டுமோ செடிகளுக்கும் அதேபோல் அளவோடு கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: உடலுறவால் கிடைக்கும் மனநிம்மதி! - காரணம் இதுதான்..