சென்னை: தற்போது ஒவ்வொரு வீட்டின் அத்தியாவசியமான எலட்ரானிக் பொருளாக ஃபிரிட்ஜ் உள்ளது. உணவையும் உணவுப் பொருட்களையும் சேமித்து வைக்கப் பயன்படும் ஃபிரிட்ஜை கூடுதல் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். ஃபிரிட்ஜ்க்குள் உள்ள பொருட்கள் ஒழுங்கில்லாமல் கண்டபடி இருப்பதால், நாம் எடுக்கும் போது மற்றொரு பொருள் கொட்டுவது, நாள் போக்கில் துர்நாற்றம் வீசுவது போன்றவை நிகழ்கின்றன.
இவ்வாறு நிகழாமல் இருக்க பிரிட்ஜில் உள்ள பொருட்களை சரியான முறையில் அடுக்கி வைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் உள்ள பொருட்களை முறையாக அடுக்கி வைக்கும் போது, எந்த பொருள் எங்குள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும் என்று தெரியவில்லையா?. கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி ஃபிரிட்ஜை பராமரித்தால் போதும். துர்நாற்றமோ, பொருட்களை எடுக்கும் போது தடையோ இருக்காது.
ஃபிரிட்ஜை சுத்தப்படுத்த வேண்டும்: முதலில் ஃபிரிட்ஜை ஆஃப் செய்து விட்டு திறந்த நிலையில் எல்லா பொருட்களையும் வெளியே எடுத்து வைக்க வேண்டும். அதன் பின் ஃபிரிட்ஜில் உள்ள ட்ரேகளையும் (Tray), பிரிட்ஜின் அடுக்குகளையும் நன்றாக கழுவி காய வைத்து அதன் பின் உள்ளே வைக்க வேண்டும். சமையல் சோடா பயன்படுத்தி க்ரப் செய்வது சிறந்தது. ஃபிரிட்ஜில் இருந்த காலாவதியானப் பொருட்களை அகற்றுவது அவசியம்.
மேல் அலமாரி (Top Shelf): ஃபிரிட்ஜின் மேல் அலமாரி சற்று சூடாக இருக்கும். ஆகையினால் புதிய பொருட்களை அதாவது புதிதாக வாங்கிய இறைச்சியோ போன்றவற்றை இங்கே வைக்க வேண்டாம். மாறாக அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை மேல் அலமாரியில் வைப்பது சிறந்தது.
நடு அலமாரி (Middle Shelf): காய்கறிகள், பால் மற்றும் பால் பொருட்களை இங்கு வைக்கலாம். மற்ற அலமாரிகளுடன் ஒப்பிடும் போது, நடு அலமாரி சற்று உயரமாக இருக்கும். ஆகவே இதில் உயரமான கண்டெய்னர்களை இங்கு வைக்கலாம்.
கீழ் அலமாரி (Bottom Shelf): கீழ் அலமாரி மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் இறைச்சி, மீன் போன்றவற்றை இங்கு சேமித்து வைக்கலாம். விரைவாக கெட்டுவிடும் பொருட்களை இங்கு வைப்பது சிறந்தது.
கதவில் உள்ள ட்ரே (Door Tray): கதவைப் பொருத்தவரை குளிர்பதம் சற்று குறைவாக இருக்கும். ஆகையினால் ஜூஸ், ஜாம், சாஸ் போன்றவற்றை இங்கு வைக்கலாம். மேலும் முட்டை மற்றும் மசாலாப் பொருட்களை இங்கு சேமித்து வைப்பது சிறந்தது.
உயரமான பொருட்களை பின்புறம் வைக்க வேண்டும்: குட்டையானப் பொருட்களை முன்பக்கமும், உயரமான பொருட்களை பின்பக்கமும் அடுக்கி வைப்பது சிறந்தது. இதனால் பொருட்களை எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்.
ஒரு சிறிய பாக்கெட் சமையல் சோடாவை எடுத்து பாக்கெட்டின் இரு முனையில் ஊசியால் துளையிட வேண்டும். பிரிட்ஜின் ஒரு மூலையில் இதை வைத்துவிட்டால் போதும், ஃபிரிட்ஜில் இருந்து துர்நாற்றங்கள் பரவாமல் தடுக்கலாம்.
இதையும் படிங்க: How long does meat last in the fridge: இறைச்சியை வாரக்கணக்குல ஃபிரிட்ஜில எடுத்து வெச்சு சாப்பிடுறீங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க.!