சென்னை: விழாக்காலம் வந்து விட்டால் குழந்தைகள் காட்டில் குத்தாட்டம் தான். பள்ளி செல்வதற்கு ஓய்வு, படிப்புக்கு ஓய்வு, விளையாட்டு மற்றும் தின்பண்டங்களுக்கு மட்டும் ஓய்வே இருக்காது. அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகை நாட்களில் அனைவரது வீடுகளிலும் விதவிதமான பலகாரங்கள் தயாரிப்பார்கள். வீட்டை சுற்று ஒரு ஓட்டம் ஓடி வந்து அம்மா முறுக்கு என கேட்டு நிற்கும் குழந்தைக்கு எந்த தாய்தான் அதை தராமல் தவிர்ப்பார். முறுக்கு மட்டுமா? சீடை, அதிரசம், லட்டு, மிக்சர் என பலவிதமான தின்பண்டங்கள் தயாரிப்பதை புதிதாக பார்க்கும் குழந்தைகளுக்கு அதை உட்கொள்ள வேண்டும் என்ற ஆசையை தவிர வேறு என்ன இருக்கும். அப்படி ஓடி ஆடி விளையாடி வந்து உணவுகளை உட்கொண்டால்கூட பரவா இல்லை. சில வீடுகளில் குழந்தைகள் தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட் ஃபோன் முன்பு நேரத்தை செலவழித்துக்கொண்டு அளவு கடந்து உட்கொள்வார்கள். இதனால் பல உடல் நல உபாதைகள் ஏற்படும் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகை உணவுகளை அளவு கடந்து உட்கொண்டால்: வீட்டில் உள்ள குழந்தைகள் தீபாவளி நாளில் சைவம், அசைவம், இனிப்பு வகைகள், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக உட்கொள்கின்றனர். அது மட்டும் இன்றி, குளிர் பானங்கள், ஐஸ் க்ரீம் உள்ளிட்டவைகளையும் சாப்பிடுகின்றனர். பற்றாக்குறைக்கு உறவினர்கள் நம் வீட்டிற்கு வந்தாலோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கு சென்றாலோ அவர்கள் வழங்கும் உணவையும் உட்கொள்கின்றனர். இதனால், வயிற்று வலி, செரிமான பிரச்சனை, வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல் ஊபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகள் அளவு கடந்து உட்கொள்வதை கட்டுப்படுத்துவது எப்படி?
- குழந்தைகளால் அவர்கள் நினைக்கும்போது எடுத்து சாப்பிடும் வகையில் பலகாரங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்
- அவர்கள் இரண்டு முறுக்கு கேட்டால் ஒன்றுதான் இருக்கிறது மற்றவர்களுக்கும் வேண்டும் எனக்கூறி தவிர்க்க வேண்டும்
- குழந்தைகள் முன்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தின்பண்டங்கள் அடிக்கடி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்
- எண்ணை உணவுகள் அதிகம் சாப்பிடக்கூடாது, ஐஸ் க்ரீம் மற்றும் குளிர்பானம் ஆரோக்கியத்திற்கு தீங்கு என்பதை எடுத்துக்கூற வேண்டும்
- உறவினர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை, அதை பிறகு சாப்பிடலாம் எனக்கூறு மறுப்பு தெரிவிக்க வேண்டும்
- தண்ணீர், மோர், பழச்சாறுகளை அடிக்கடி குடிக்கக் கொடுக்க வேண்டும். இது அவர்கள் பசியை கட்டுப்படுத்தும்
- உணவு மற்றும் பலகாரங்கள் உட்கொள்ளும்போது தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட் ஃபோன் பார்ப்பதை அனுமதிக்கக்கூடாது
- குழந்தைகளை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்த கூடாது. அவர்களுக்கு பசி ஏற்படும் போது சாப்பிட விட வேண்டும். இது அவர்கள் கவனத்துடன் சாப்பிட உதவும்.
தீபாவளி பண்டிகையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கோட்டை விடாமல், பெற்றோர் கவனமுடன் இருந்து மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடுங்கள்.