துரித உணவுகள் அதிகளவில் உட்கொள்ளும் பழக்கம் சமூகத்தில் அதிகரித்துள்ள காரணத்தால் பொதுவாகவே, 30 வயதை கடந்தவர்களக்கு திடீர் உடல் வலிகள் முதல் வளர்சிதை, சிறுநீரக கற்கள் உள்ளிட்ட மருத்துவ ரீதியான பிரச்னைகள் வர தொடங்கிவிடுகிறது.
அதிர்ஷ்டவசமாக, உங்கள் 30களில் உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள சில எளிய வழிமுறைகள் உள்ளன. அதை நீங்களே செய்ய முடியும், அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
உணவில் கவனம் தேவை:
முப்பது என்பது நம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சில வாழ்க்கை முறை மாற்றங்களைத் தழுவுவதற்கான நேரமாகும். பருவ காலத்தில் வேகமாக இயங்கிய உடலின் செயல்பாடுகள் 30களில் சீராக இயங்குகிறது. எனவே நீங்கள் அதற்கு ஏற்றவாறு உங்கள் உணவு பழக்க வழக்கங்களை மாறிகொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய், காரம் மற்றும் இனிப்பு உணவுகளை முடிந்தவரை குறைக்கவும். உணவில் சாலடுகள், பழங்கள், இலை காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் அவை கொழுப்பு, இதய பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள்:
பல லட்சம் தடவை நீங்கள் இந்த அறிவுரையை கேட்டிருக்க நேரிட்டிருக்கும். இருந்தபோதிலும் உடல்நிலை சீராக வைத்துக்கொள்ள உடல் பயிற்சி மேற்கொள்வது இன்றியமையாதது. உடற்பயிற்சி செய்வதற்கு பொருத்தமான நேரத்தை முடிவு செய்யுங்கள். முதலில் நடைபயிற்சி, மெதுவான ஜாகிங், சிட் அப்கள் போன்ற லேசான பயிற்சிகளுடன் தொடங்குங்கள்.
நீங்கள் ஒரு உடற்பயிற்சி நிபுணருடன் ஆலோசனை கேட்பது நல்லது. இதன்மூலம் அவர்கள் உங்களுக்கு சரியான வழிமுறையை காண்பிப்பர். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதிசெய்யும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்:
பொதுவாக 30களின் வயது கொஞ்சம் சுயநலமாகவும், உங்கள் சொந்த அமைதியைப் பற்றி சிந்திப்பதற்கான காலமும் ஆகும். உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒரு சில எதிர்மறையான சிந்தனை கொண்ட நபர்களை விலக்கி வையுங்கள். உங்களை பாதுகாப்பற்றதாக உணரச் செய்யக்கூடிய சூழ்நிலைகளிலிருந்து விலகிச் செல்வது உள்ளிட்ட சில கடினமான, துணிச்சலான முடிவுகளை தைரியமாக எடுங்கள்.
உங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அல்லது அலுவலக வேலைகள் எதுவாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் செய்ய முடியாது என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். மன அழுத்தம், பதற்றம் ஆகியவை இருதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்:
நீங்கள் ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் இருக்க மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை தினந்தோறும் உங்கள் அன்றாட வாழ்வியில் வழக்கத்துடன் இணைத்துக் கொள்வது வியக்கத்தக்க வகையில் சிறப்பான மாற்றத்தை கொண்டுவரும். பெரிய மாற்றங்கள் ஒரே இரவில் நடக்காது. அன்றாட பணிகளுக்கு அதற்கு ஏற்ற நேரத்தை நிர்ணயித்து, உங்களை நாள் முழுவதையும் உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் 30களில் உடல் மற்றும் உளவியல் ரீதியாக உற்சாகமாக இருந்தால் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சிறந்ததாகவும் அமையும்.