சென்னை: தீபாவளி நெருங்குவதைத் தொடர்ந்து பலகாரங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிராமங்களில் தான் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பர் என்பது மாறி, இப்போது நகர வீடுகளிலும் விதவிதமான பலகாரங்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். மற்ற நாட்களில் பலகாரங்களைக் கடைகளில் வாங்கும் நாம், பண்டிகை நாட்களிலாவது ஆரோக்கியமாகச் சாப்பிடலாம் என்று வீடுகளில் தயாரிப்பர். ஆரோக்கியம் ஆரோக்கியம் என்று நாம் வீடுகளில் தயாரிக்கும் பலகாரங்கள் ஆரோக்கியமானதா?... ஆரோக்கியமான பலகாரங்கள் செய்வதற்கு எதை நிராகரித்து, எதைச் சேர்க்க வேண்டும் என்று தெரியுமா?.. இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
நோ டால்டா: பலகாரங்களை எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியாது. ஆகவே சுத்தமான, ப்ரஷான எண்ணெய்களைச் சமையலுக்குப் பயன்படுத்துவது அவசியம். பாக்கெட்டுகளில் உள்ள எண்ணெய்களை வாங்கும் போது அதில் காலாவதி தேதியைப் பார்த்து, உணவுப்பாதுகாப்புத்துறையின் கீழ் தகுதி பெற்ற பொருள் தானா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். பல வீடுகளில் பலகாரங்கள் செய்வதற்கு டால்டா பயன்படுத்துகின்றனர். அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
வீட்டின் வெளியே சமைக்க வேண்டும்: வீடுகளில் பலகாரங்கள் தயாரிக்கும் போது குழந்தைகளின் பாதுகாப்பை நினைவில் கொண்டு சமைக்க வேண்டும். வீட்டின் நடுவில் உட்கார்ந்து சமைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் வெளியில் வைத்து தயாரிப்பது நல்லது. இதன் மூலம் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளையும் தவிர்க்கலாம்.
தரமான பொருட்கள் வாங்க வேண்டும்: ஸ்வீட், காரம் தயாரிப்பதற்குச் சேர்க்கக்கூடிய மூலப்பொருட்கள் தரமான பொருட்கள் தானா? என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். தரமான பொருட்கள் சற்று விலை அதிகம் தான். இருப்பினும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தரமான பொருட்களை வாங்குவது நல்லது.
காலாவதி தேதி பார்க்க வேண்டும்: பருப்பு, வெல்லம் போன்றவற்றை வாங்கும் போது தனியாக வாங்காமல், பாக்கெட்டுகளில் வாங்குவது சிறந்தது. ஏனெனில் தனியாக வாங்கும் பொருட்களுக்குக் காலாவதி தேதி தெரியாது, அப்பொருளுக்கு உணவுப்பாதுகாப்புத்துறையின் சான்று கிடையாது. பூச்சி, புழுக்கள் இருக்கலாம்.
இல்லத்தரசிகள் கவனத்திற்கு: தீபாவளி பண்டிகை வந்தாலே ஒன் பிளஸ் ஒன் ஆஃபர் வந்து விடும். இவ்வகையான ஆஃபர் பொருட்களை வாங்கக் கூடாது. ஏனெனில், இந்த சமயத்தில் காலாவதியான பொருட்கள் அதிகம் விற்பனைக்கு வரும். ஆகையினால் அதை தவிர்ப்பது நல்லது.
நோ புட் கலர்: வீடுகளில் சமைக்கும் போது, புட் கலர் ஏதும் பயன்படுத்தாமல் சமைப்பது நல்லது.
உணவு பொருட்களின் தரத்தில் குறைபாடுகள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணின் மூலம் உணவு பாதுகாப்புத்துறைக்குப் புகார் அளிக்கலாம்.
இதையும் படிங்க: மழைக்காலம் வந்தாச்சு! வாங்க விதவிதமாக வெஜிடபிள் சூப் செய்யலாம்...