சென்னை: கண்ணாடி போல் பளபளப்பான முகம் யாருக்கு தான் பிடிக்காது. அப்படியிருக்க முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் அழகையே கெடுத்து விடுகின்றன. இதை எவ்வாறு சரி செய்வது பல பெண்கள் புலம்பி தவிர்க்கின்றனர். இதன் காரணமாக சிலர் கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை முகத்தில் பூசுகின்றனர்.
சிலர் அதிக செலவு செய்து அழகு நிலையங்களை நாடி செல்கின்றனர். இந்த விஷயத்திற்கு அவ்வளவு ரிஸ்க் எடுக்க தேவை இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது சிறிது நேரம் செலவிடுவதே. முதலில் எதனால் இந்த கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
எதனால் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன: வளர்சிதை மாற்றத்தை அனுமதிக்க, சருமத்தில் இருந்து செபாசியஸ் என்ற சுரப்பி எண்ணெய்யை வெளியிடும். இது இயல்பானதே. ஆனால் இந்த எண்ணெய் வெளியீடு அதிகமாகும் போது சருமத்தில் உள்ள அழுக்குகள் அதனுடன் சேர்ந்து கரும்புள்ளிகள் உருவாகும். குறிப்பாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாகக் காணப்படும். உடலில் ஹார்மோன் சமநிலையில்லாமல் இருப்பதாலும் கரும்புள்ளிகள் ஏற்படலாம். மேலும் தூசு, அழுக்கு, காற்றுமாசு அதிகம் உள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கும் கரும்புள்ளிகள் ஏற்படும்.
இந்த கரும்புள்ளிகளை செலவே இல்லாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி மறைய வைக்கலாம் என்று பார்க்கலாம்.
ஆவி பிடித்தல் (Steaming): ஆவி பிடிப்பதன் மூலம் கரும்புள்ளிகளை மறைய வைக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மிதமாக கொதிக்க வைத்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்களை வரை ஆவி பிடிக்கலாம். இந்த செயல்முறையை மூன்று முதல் நான்கு முறை வரை செய்யலாம். இதனை அடுத்து சிறிது சர்க்கரையை கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதை செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பிரகாசமாக இருக்கும்.
சமையல் சோடா (Baking Soda): சமையல் சோடா ஒரு இயற்கையான எக்ஸ்போலியேட்டராக (exfoliator) செயல்படுகிறது. ஒரு ஸ்பூன் சமையல் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் தயாரிக்கவும். இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகள் அதிகமுள்ள இடங்களில் தடவி கொள்ளவும். ஓரிரு நிமிடங்களில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது போல் வாரம் ஒருமுறை செய்து வர கரும்புள்ளிகள் முழுவதுமாக மறைந்துவிடும்.
தேன் மற்றும் இலவங்கப்பட்டை (Honey and Cinnamon): இலவங்கப்பட்டை பொடியுடன் சிறிது தேன் கலந்து, பேஸ்ட் போல் தயார் செய்யவும். பின்னர் அந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இலவங்கப்பட்டை சருமத்தில் உள்ள துளைகளை இறுக்கி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
எலுமிச்சை சாறு (Lemon Juice): பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட எலுமிச்சை சாறு, முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், பஞ்சை நனைத்து முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீரில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
டீ ட்ரி எண்ணெய் (Tea Tree Oil): ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்ட டீ ட்ரி எண்ணெய் முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை தடுக்க உதவுகிறது. சிறிதளவு டீ ட்ரி எண்ணெய்யில், பஞ்சை நனைத்து, முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
இதையும் படிங்க: இரவில் சரியாக தூக்கம் வரலையா? - அப்போ இதுவும் கூட ஒரு பிரச்சினையாக இருக்கலாம்..!