சென்னை: நம்மில் பலர் கழிவறைக்குச் செல்லும்போது கையில் மொபைல் ஃபோனுடன் செல்வதைப் பார்த்திருப்போம். ஏன் நம்மில் பலருக்குக் கூட இந்த பழக்கம் இருக்கலாம். மொபைல் ஃபோன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்ற காதல் வசனங்களுக்கு இன்றைய தலைமுறை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எனப் பலரும் கேலி பேசிக் கேட்டிருப்போம்.
ஆனால் அது கேலி கிண்டலுடன் கடந்து செல்லும் விஷயம் அல்ல. மொபைல் ஃபோன் பயன்பாட்டால் கண்ணில் பிரச்சனை, மூளை நரம்புகளில் பிரச்சனை எனப் பலவற்றைக் கேட்டிருப்போம். இருந்தாலும் நம்மால் மொபைல் ஃபோன் இல்லாமல் வாழ முடியாது. ஏன் என்றால் இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் ஃபோன்களின் முக்கியத்துவம் அனைத்தையும் ஆட்கொண்டுவிட்டது.
இந்த சூழலில்தான் மக்கள் பலர் நடு ராத்திரியில் மொபைல் ஃபோன் பயன்படுத்துவது மட்டும் இன்றி கழிவறைக்குக் காலைக் கடன் செலுத்தச் செல்லும்போதும் கையில் மொபைல் ஃபோனுடன் செல்கின்றனர். இதனால் என்ன? ஏன் பயன் படுத்த கூடாதா? என்ற கேள்விகளை நீங்கள் ஆக்ரோஷமாகக் கேட்டாலும்.. ஆமாம் என்ற அடக்கமான பதில்தான் வரும். ஆம்.. நீங்கள் கழிவறைக்குச் செல்லும்போது கையில் மொபைல் ஃபோன் எடுத்துச் சென்றால் வரும் பிரச்சனைகள் என்னென்ன எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
கழிவறைக்கு மொபைல் ஃபோன் எடுத்துச் செல்லும்போது: பொதுவாக ஒருவர் கழிவறைக்குச் சென்றால் காலைக் கடனை கழிக்க 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆகலாம். சிலர் போவதும் தெரியாது.. வந்ததும் தெரியாது என்ற வகையில் விரைவாகக் காலைக் கடனை கழித்து வெளியே வருவார்கள். ஆனால் மொபைல் ஃபோனுடன் கழிவறைக்குச் செல்லும் நபர்கள் சுமார் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை கழிவறையில் அமர்ந்து இருப்பார்கள்.
இதனால் என்ன ஆகும் தெரியுமா? ஆசனவாயில் அழுத்தம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் வரலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம், அந்த சூழலுக்கு அடிமையாகலாம், உங்கள் நேரம் வீணடிக்கப்படலாம், மன அழுத்தம் ஏற்படலாம், கண் மற்றும் கழுத்து நரம்பில் பிரச்சனைகள் வரலாம்.
ஆசனவாயில் அழுத்தம்: ஆசனவாயில் தொடர்ந்து நீண்ட நேரம் அழுத்தம் ஏற்படுவதால் காலப்போக்கில் மூலக்கூறு வர வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். அது மட்டும் இன்றி, ஆசனவாய் விரிவடைந்து இரத்த கசிவு ஏற்படலாம் எனவும் கூறுகின்றனர்.
வயிறு தொடர்பான பிரச்சனைகள்: வயிற்றை நீண்ட நேரம் அழுத்திக் கழிவுகளை அகற்றும் மனநிலையுடன் அமர்ந்திருப்போம். அந்த சூழலில் உடலில் நடக்கும் செயல்பாடுகளில் மூளை கவனம் செலுத்த முடியாத வகையில் நாம் மொபைல் ஃபோன் பயன்படுத்துவோம். இதனால் மலம் கழிப்பதற்கான ஹார்மோன் சுரப்பு உள்ளிட்ட பல செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் பெருங்குடல், சிறு குடல்,கணையம் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
சூழலுக்கு அடிமையாவது: நீங்கள் நாள்தோறும் கழிவறைக்குச் செல்லும்போது மொபைல் ஃபோன் எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள். மலம் கழிக்கும்போது மொபைல் ஃபோன் பயன்படுத்தியபடி இருக்கிறீர்கள் என்றால்... உங்கள் மூளைக்கு நல்லதும்.. கெட்டதும் தெரியாது.. நீங்கள் செய்யும் செயலை அது உள் வாங்க ஆரம்பித்து காலப்போக்கில் அந்த செயலுக்கு அடிமையாகி விடுவீர்கள். மொபைல் ஃபோன் இல்லாமல் மலம் கழிக்க முடியாது என்ற மனநிலை இதனால் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அது மட்டும் இன்றி, உங்களை அறியாமலேயே மொபைல் ஃபோனில் இன்ஸ்டா, ஃபேஸ் புக், யூ டியூப் உள்ளிட்டவைகளை பார்ப்பதால் நேரம் வீணாவதுடன் காலையிலேயே நீங்கள் முன்கூட்டி திட்டமிட்ட பணிகள் தடைபட வாய்ப்புகள் உள்ளன. மேலும், இதுபோன்ற பல பிரச்சனைகளால் மன அழுத்தம் ஏற்படலாம். உட்கார்ந்தவாறு கண்ணின் மிக அருகாமையில், கழுத்தைக் கீழ் நோக்கித் தாழ்த்தியவாறு நீண்ட நேரம் மொபைல் ஃபோன் பயன்படுத்துவதால் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: திடீர் நெஞ்சு வலி.. பூச்சாண்டி காட்டும் வாயுத்தொல்லை: தீர்வு என்ன?