சென்னை: கொளுத்தும் கோடை காலங்களுக்கு பிறகு வரும் மழை அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைக்கும். ஆனால் வெயில் காலத்தை விட மழைக்காலத்தை சமாளிப்பது தான் கடினம். காய்ச்சல், சளி, சருமம் வறட்சி உள்ளிட்ட உடல் தொந்தரவுகள் அதிகம் ஏற்பட்டு உடலை சோர்வாக்கும். வடகிழக்கு பருவ மழை தற்போது தொடங்கிய நிலையில் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தொடங்க ஆரம்பித்துவிடும். இந்த குளிர் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பார்க்காலாம்.
தொண்டை வலி: கால மாற்றத்தால் ஏற்படும் முதல் பிரச்சனை தொண்டையில் தான் ஆரம்பிக்கும். குளிர் காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். இதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும். தொண்டை வலி அதிகமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பை கரைத்து, வாய் கொப்பளிக்க வேண்டும். இதற்கு முன்னெச்சரிக்கையாக ப்ளாஸ்க் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
மப்ளர்,கம்பளி: இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் பணிக்கு செல்பவர்கள் சற்று கனமான ஆடைகள், மப்ளர் , கம்பளி, ஸ்வெட்டர் போன்ற உடைகளை அணிந்து கொள்ளவும். முக்கியமாக வயதானவர்கள், ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் காலையில் நடைபயிற்சி செய்வதை தவிர்த்து மாலை வெயிலில் நடக்கவும்.
நீர் சத்து குறைபாடு: குளிர் காலத்தில் தாகம் எடுக்காமல் இருப்பதால் நாம் தண்ணீர் குடிப்பதை மறந்து விடுவோம். இதனால் உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் நீர் சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். உடலின் சூட்டை தக்க வைப்பதற்கு இஞ்சி டீ, சுக்குக்காபி போன்ற மூலிகை டீக்களை குடிக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இரவில் தரும் பாலில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கொடுக்கவேண்டும்.
சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவும்: குளிர்காலம் என்பதால் தினமும் நாம் சூடான தண்ணீரில் குளிப்பது வழக்கம், ஆனால் அது நாம் எதிர்பாராத அளவிற்கு சருமத்தை வறட்சியடைய செய்யும். அதனால் மிதமான சூடுள்ள நீரில் குளிப்பது நல்லது. வாரம் ஒரு முறை எலும்பிச்சை இலை, நொச்சி இலை, கற்பூரவல்லி இலை போன்றவற்றை போட்டு சுடுநீரில் ஆவிபிடிக்க வேண்டும்.
ஸ்லிப்பர் போட்டு நடங்க: குளிர்காலத்தில் வீட்ற்குள் வெறும் காலில் நடப்பதால் பாத வெடிப்பு, கால் வலி போன்ற பிரச்சனைகளை வரும். இதற்கு வீட்டிற்குள் பயன்படுத்தும் ஸ்லிப்பர்களை பயன்படுத்த வேண்டும். மேலும், வீட்டிற்குள் ஸ்லிப்பர் போட்டு நடப்பதால் குளிர்ச்சியை உடலுக்குள் கடத்தாமல் தடுக்கலாம்.
உணவு முறையில் கவனம்: முக்கியமாக குளிர்காலத்தில் உணவு பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், மீன்கள், நட்ஸ் வகைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அனுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நாம் அருந்தும் உணவில் இஞ்சி, பூண்டு, மிளகு, புதினா ஆகியவற்றை சேர்த்து கொண்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
சருமம் பாதுகாப்பு: உதடு வெடிப்பை தடுக்க இரவில் தூங்க செல்வதற்கு முன் நெய் அல்லது வெண்ணெய்யை உதட்டில் தடவி தூங்க வேண்டும். பகல் நேரங்களில் லிம் பாம் போன்றவற்றை உபயோகப்படுத்தவேண்டும். ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி குளித்து வந்தால் உடல் சருமம் சீராகும்.
இதையும் படிங்க: இப்படி பண்ணிட்டு இருக்கீங்களா?... சருமத்தை பராமரிப்பதாகக் கூறி நாம் செய்யும் தவறுகள்!