இயந்திரகதியிலான தற்போதைய நவநாகரிக உலகில், மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை போன்றவை மிகவும் சாதாரணமாக மாறி விட்டன. இவைகள் தலைவலி ஏற்படவும் காரணமாக அமைகின்றன. தலைவலியால் ஒருவர் அவதிப்படும் பட்சத்தில், அவரால் எந்த ஒரு வேலையிலும், முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. எப்பொழுதாவது வரும் தலைவலியை, நாம் மாத்திரை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.
ஆனால், தலைவலி வரும்போதெல்லாம், மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில், பக்கவிளைவுகள் மட்டுமல்லாது, பல உடல்நலக்குறைவுகளும் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். அடிக்கடி ஏற்படும் தலைவலியை, நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே, எவ்வாறு தடுப்பது என்று இக்கட்டுரையில் காண்போம்...
நமது உடலில் ஏற்படும் அதிக அளவிலான நீரிழப்பும், தலைவலி ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். உடலின் நீர் அளவு குறையும்பட்சத்தில், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக, சில ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்து உள்ளன. எனவே, தலைவலியில் இருந்து விடுபட, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் அவசியம் ஆகும்.
மெக்னீசியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, நமது உணவில் அதிக அளவு பச்சைக் காய்கறிகள், நட்ஸ், தானியங்கள், டார்க் சாக்லேட் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இருப்பினும், அதிகப்படியான மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது சிலருக்கு வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால், நிபுணர்களின் ஆலோசனையின்படி அவற்றை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது.
துரித உணவுகளான சீஸ், பர்கர், ஸ்மோக்டு மீன், இறைச்சி உள்ளிட்டவைகளில் ஹிஸ்டமைன் எனும் வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இவ்வகை உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதால், பலருக்கு ஒற்றைத் தலைவலி பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், சில மீன் வகைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தலைவலியைக் குறைக்க உதவுகின்றன.
தூக்கமின்மை, உடல் ஆரோக்கியத்தைப் பல்வேறு வழிகளில் பாதிக்கின்றது. அதில் மிக முக்கியமானது தலைவலி ஆகும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியாக உறங்குவது நல்லது. தலைவலியால் அவதிப்படுபவர்கள், சந்தையில் கிடைக்கும் சில வகையான எண்ணெய்களைப் பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். குறிப்பாக மிளகுக்கீரை எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் உள்ளிட்டவைகள், தலைவலியை குணப்படுத்தும் காரணிகளை தன்னகத்தே கொண்டு உள்ளன.
அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக தலைவலி ஏற்படும் போது, சிறிது மிளகுக்கீரை எண்ணெயை,நெற்றியில் தேய்த்து, மெதுவாக மசாஜ் செய்யவும். லாவெண்டர் எண்ணெய் ஒற்றைத் தலைவலியின் தீவிரத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக உள்ளது.
ஐஸ் கட்டியை நெற்றியில் வைத்து சிறிது நேரம் தடவி வந்தால் தலைவலியில் இருந்து விடுபடலாம். ஐஸ் கட்டி கிடைக்காதபட்சத்தில், உறைந்த ஜெல்லை தடவுவது அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியைத் தலையில் வைப்பது நல்ல பலனைத் தரும்.
காபி, டீ போன்ற பானங்களில் உள்ள காஃபின் வேதிப் பொருள், தலைவலியின் வீரியத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, காபி மற்றும் டீ போன்ற பானங்களுக்குப் பலர் அடிமையாகி உள்ளனர். உடல் எடையைக் குறைக்க திட்டமிட்டு இருப்பவர்கள் காபி, டீ போன்ற பானங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. எனவே, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கோப்பைகளுக்கு மேல் குடிக்க வேண்டாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.