கரோனா வைரஸ் (தீநுண்மி) மாறிவரும் அதன் அறிகுறிகளினாலும், பின்விளைவுகளினாலும் உலகின் பயங்கரவாத நோயாக மாறியுள்ளது. கரோனா வைரஸ் நுரையீரல், சுவாசப் பாதைகளை மட்டும் பாதிக்காமல் நரம்பு மண்டலங்களையும் பாதித்து மனநல பிரச்னைகளை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஹைதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில், நரம்பியல் நிபுணராகப் பணிபுரியும் மருத்துவர் ஸ்ரீகாந்த் வெமுலா, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களும், தொற்றுநோயிலிருந்து மீண்ட மக்களும் என்செபலோபதி எனப்படும் மூளை நோயாலும், என்செபலிடிஸ் எனப்படும் மூளை வீக்கத்தாலும் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் உறைதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மக்கள் பலர் பரம்பரை நோயான நீரிழிவு, ரத்த அழுத்தம், பக்கவாதம் ஆகியவற்றாலும், இதற்கு முன் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்காதவர்கள் புதிதாகவும் பாதிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
மூளையில் கரோனா வைரஸ் தாக்குவதால் ஏற்படும் அதிகப்படியான விளைவுகள்
மற்ற நரம்பியல் வெளிப்பாடுகள் அவ்வளவு கடுமையானதாக இல்லாவிட்டாலும், மனநலம் தொடர்பான வெளிப்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இவை நிச்சயமற்ற நிலையை அளித்து, பாதிக்கப்பட்டவர்களை மிகவும் கடுமையான சூழலிற்குள் தள்ளுகிறது.
இதுபோன்ற கடுமையான நிலைமைகளை மக்கள் முன்னதாக அனுபவிக்காவிட்டாலும், பலர் நரம்பு மண்டலங்களின் பாதிப்பால் தலைவலி போன்ற கொடுமையான பாதிப்பினை எதிர்கொள்கின்றனர். முன்னதாக ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர். ஒற்றைத் தலைவலியில், ஒருவருக்கு ஒரு பக்க அல்லது இரு பக்க தலைவலி ஏற்படுவது மட்டுமின்றி ஒளி மற்றும் ஒலியின் சகிப்புத்தன்மை, குமட்டல் உணர்வு போன்றவையும் உண்டாகிறது. அவர்களுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பிற்கு பின்னரே இதுபோன்ற மோசமான அறிகுறிகள் தென்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
தான் பணிபுரியும் மருத்துவமனையில் 13 மற்றும் 14 வயதிலான இரண்டு குழந்தைகள் ஒரே சமயத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இதே போன்ற பாதிப்புகளில் மிகுந்த வலிகளைத் தாங்கினர். அவர்களுக்கு அனைத்து நேரத்திலும் தலைவலி ஏற்படாமல், திடீரென வலியால் துடித்தனர். இது அசாதாரணமான அறிகுறிகளாக இருந்தது. இதில் ஆச்சரியமூட்டும் வகையில் அவர்கள் இருவரும் மனநிலை தொந்தரவிற்கான சிகிச்சை பெற்றவுடன் இதுபோன்ற வலிகளிலிருந்து வெளிவந்துள்ளனர்.
கரோனா தொற்றிற்கு முன்னதாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட பலர், தொற்று பாதிப்பிற்கு பிறகு மிக அதிகளவு மன அழுத்தங்களைக் கொண்டிருந்ததும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிக்கப்பட்டவர்களின் உடலிற்குள்ளும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலின் மற்ற பாகங்களை விட மூளை அதிகளவு பாதிப்பிற்குள்ளாகிறது. எனவே, கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவு மூளை தொடர்பான பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் பிற பகுதிகளில் உள்ள நரம்புகளை உள்ளடக்கிய ஒரு மெல்லிய படலத்தில் ஏற்படும் மாற்றங்கள் நரம்புகளின் சக்தியை குறைத்ததன் செயல்பாட்டைத் தடுக்கிறது. ஆனால், இவை அனைவருக்கும் பொதுவாக ஏற்படுவதாகத் தெரியவில்லை.
மூளை மற்றும் முதுகெலும்பை முழு உடலுடனும் இணைக்கும் புற நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் உடல் உறுப்புகளின் உணர்வுகள், இயக்கங்கள் மற்றும் ஒருங்கிணைப்பைக் கட்டுப்படுத்தும் செயல்களிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பலருக்கு கால்களின் செயல்பாடுகள் பலவீனமடைந்து நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. தசைவலி, வலிப்பு உள்ளிட்டவைக்கும் இவை காரணமாக அமைகிறது.
கடந்த கால நோய்களும் கரோனாவும்
உலகம் முழுவதும் கரோனா வைரஸிற்கு (தீநுண்மி) முன்னதாக அதிகளவு பாதிப்பை ஏற்படுத்திய நோய்கள் பல நரம்பு மண்டலங்களையும் பாதித்துள்ளன. என்செபாலிடிஸ் லெதர்கிகா என்றழைக்கப்பட்ட நோய் 20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய தொற்று நோய். இவை நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதித்தது.
இதற்கிடையில், கரோனா வைரஸிற்கும் (தீநுண்மி) மூளைக்கும் உள்ள தொடர்பு குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. மருத்துவர்கள் தங்களது நோயாளிகளுக்கு உள்ள அறிகுறிகளின்படி சிகிச்சை அளித்து வருகின்றனர். பெரும்பாலான நோயாளிகள் குணமடைந்து கொண்டிருக்கும்போது, நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைவதையும் மறுக்க முடியாது.
எனவே, தொற்று பாதிப்பு குறைந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் தீவிர முன்னெச்சரிக்கைகளை அனைவரும் பின்பற்றுவது அவசியமாகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பதும் அவசியம். தலைவலி, தாங்க முடியாத வலி, குமட்டல், கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் மூளையை பாதித்தால் என்னவாகும்?