சென்னை: மற்றவர்களிடம் பேசும் போது வாயில் இருந்து துர்நாற்றம் வரும் என்ற பயத்தால், தவிர்க்க முடியாமல் காலையில் பல் துலக்குகிறோம். இரவு யாரோடு பேச போகிறோம், மொத்தமாக காலையில் எழுந்து துலக்கிக் கொள்வோம் என்று இரவு பல் துலக்குவதை பலர் தவிர்த்து விடுகிறோம்.
பற்களில் ஏதாவது பிரச்சினை என்று பல் மருத்துவரிடம் சென்றாலே, தினமும் காலை இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர் கூறுவார். சோம்பேறித்தனத்தால் பல் துலக்குவதை தவிர்த்து விடுகிறோம். இதனால் பல் சொத்தை உட்பட பல்வேறு வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். பெரும்பான்மையான இந்தியர்கள் தங்களது சோம்பேறித்தனத்தால் இரவு பல் துலக்குதலை புறக்கணித்து விடுகின்றனர்.
45 சதவீத இந்தியர்களே ஒரு நாளைக்கு இருவேளை பல் துலக்குகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 10 இந்தியர்களில் 9 பேருக்கு சொத்தைப்பல் பாதிப்பு இருப்பதாக இந்திய பொது சுகாதார பல் மருத்துவ சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் வம்சி கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.
இரவு பல் துலக்குவதை புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகள்:
- இரவு பல் துலக்கு தவறுவதால் வாய் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நாள் முழுவதும் பற்களில் இருப்பதால், பல் எனாமலை உடைக்கும் அமிலங்கள் உருவாகும். இதன் விளைவாக பல் சொத்தை மற்றும் பற்சிதைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
- வாய் ஆரோக்கியம் என்பது இதய ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டது. வாய் ஆரோக்கியத்தை பராமரிக்காவிட்டால், வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள், இரத்த நாளங்களில் வழியாக தமனிகளை பாதிக்கும். இதன் விளைவாக இதய நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்று பல் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
- தூக்கத்தின் போது, உமிழ்நீர் சுரப்பு குறையும். இதனால் பாக்டீரியாக்கள் அதிகளவில் பரவி, வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும்.
- இரவு பல் துலக்காமல் இருப்பதால், பிளேக் கட்டிகள் உருவாகி, ஈறு அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தும்.
- குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரு வேளை பல் துலக்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் உயர் இரத்த சர்க்கரை நோய், இரத்த வெள்ளையணுக்களை பலவீனப்படுத்தும். இதனால் பல் ஈறுகளில் இரத்த கசிவு உள்ளிட்ட பல் ஈறு பிரச்சினைகளை உண்டாக்கும்.
இரவு பல்துலக்குவது அவசியம்:
- இரு நேரம் பல் துலக்குவதை புறக்கணித்து விடுவதால் மேற்கண்ட விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்தோம். ஆகையால் இனிமேலாவது இரு நேரம் பல் துலக்குவதை பின்பற்ற வேண்டும்.
- வாய் ஆரோக்கிய பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதால், இரவு பல் துலக்குவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
- குழந்தைகளிடம் இரு வேளை பல் துலக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, அவர்களை இரு வேளை பல் துலக்க ஊக்குவிக்க வேண்டும்.
இதையும் படிங்க: பட்டு போல் மிருதுவான கூந்தல் வேண்டுமா?... இதை மட்டும் செய்தால் போதும்!