சென்னை: வீடு வெறும் குடியிருப்புக்கான அம்சம் அல்ல.. அங்கு நமக்கான மன நிம்மதி, ஆரோக்கியமான வாழ்வியல் சூழல் இருக்க வேண்டும். அதற்கு நாம் முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், வீடுகளில் மரம் மற்றும் செடி, கொடிகளை வளர்ப்பதுதான். வீடுகளில் சில வகையான மரம், செடி மற்றும் கொடிகளை வளர்ப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்வையும், மன நிம்மதியான சூழலையும் அந்த வீட்டில் இருப்பவர்களால் பெற முடியும் என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மூலிகை மருத்துவத்தின் அடிப்படையில் வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்கள் அனைத்தும் நோய்கள் வந்த பிறகு அல்ல நோய்களே வராமல் தடுக்கும் அளவுக்கு மகத்துவம் பெற்றவை எனவும் மக்கள் தங்கள் வீடுகளில் தாவரங்களை வளர்க்க வேண்டியது இன்றைய சூழலில் கட்டாயம் எனவும் கூறப்படுகிறது. முன்னோர்கள் தங்கள் வீடுகளில் ஒட்டு திண்ணை கட்டுவதற்கும், துளசி மடம் வைப்பதற்கும், வேப்ப மரம் வளர்ப்பதற்கும் பின்னால் ஆயிரம் அர்த்தங்களை வைத்திருந்தனர். அது மட்டும் இன்றி, வீட்டைச் சுற்றி கொஞ்சம் நிலத்தை மிச்சம் வைத்திருப்பார்கள். அந்த நிலத்தில் சில வகையான மரங்கள், செடிகள் மற்றும் கொடிகளை நட்டு வைத்துத் தொடர்ந்து பராமரித்து வருவார்கள். அந்த வகையில் எந்தெந்த மரம், செடி, கொடிகளை வீட்டில் வளர்க்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
மரங்கள் | செடிகள் | கொடிகள் |
வேப்பமரம் | துளசி | மல்லிகை பூ |
சீத்தாப்பழ மரம் | கருவேப்பிலை | முல்லை பூ |
வாழை மரம் | தூதுவளை | மணிபிளான்ட் |
தென்னை மரம் | கட்றாழை | கோவைக்காய் கொடி |
பலா மரம் | கற்பூரவல்லி | அவரைக் கொடி |
முருங்கை மரம் | மாதுளை | பரங்கிக்காய் கொடி |
கொய்யா மரம் | எலுமிச்சை | பூசணிக்காய் கொடி |
மா மரம் | நந்தியாவட்டை பூ | பாகற்காய் கொடி |
பப்பாளி மரம் | கீரை வகைகள் | தாட்பூட் கொடி |
பெரு நெல்லி மரம் | பூலாங்கிழங்கு | புடலங்காய் |
அகத்திக் கீரை மரம் | மூங்கில் செடி | பீர்க்கன் காய் |
பாக்கு மரம் | சங்கு புஷ்பம் | கொடிபசலை கீரை |
சிறு நெல்லி மரம் | தொட்டா சிணுங்கி | முடக்கத்தான் கீரை |
கருநொச்சி | செம்பருத்தி | டிராகன் ஃபுரூட் |
சந்தனமரம் | வெட்சி பூ | வெள்ளரிக்காய் |
சப்போட்டா மரம் | நிலவேம்பு | சுரைக்காய் |
இத்தனை வகையான மரம், செடி, கொடிகள் இருந்தால் உங்களுக்கு உணவுக்குப் பஞ்சமும் வராது, பசி பட்டினியும் இருக்காது, நோய் நொடியும் அண்டாது. இந்த அத்தனை வகை மரம், செடி, கொடி வகைகள் உணவுக்கு மட்டும் இன்றி மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தலாம். இதில் வீட்டின் அருகே இல்லாமல் கொஞ்சம் தூரமாக வைக்க வேண்டியவரை: காய்கறி கொடிகள், அகத்திக் கீரை மரம், முருங்கை மரம், வாழை மரம், சீத்தாப்பழ மரம் போன்றவையாகும். இதுபோன்ற பல மரம், செடி, கொடிகள் வீட்டின் அருகே வைக்கக்கூடாது எனக்கூறப்படுகிறது.
அதற்கான காரணம், முருங்கை மரத்தில் மழைக்காலங்களில் கம்பளிப் பூச்சி வர வாய்ப்பு இருக்கிறது. காய் கறிக்கொடிகள் உதாரணத்திற்கு அவரைக் கொடி தெரியாத்தனமாக கொஞ்சம் சருமத்தில் பட்டால் காயம் ஏற்பட்டு தழும்பாக மாறிவிடும். மேலும் பல கொடி வகைகள் அடர்ந்து பரந்து வளரும், இதனால் வீட்டின் அருகே புதைபோன்று காட்சி அளிக்கும் பாம்பு உள்ளிட்டவை வந்தால் கூட தெரியாது. இதன் காரணமாக இந்த வகையான செடி, கொடி, மரங்களை வீட்டின் அருகே வைக்காமல் சற்று தள்ளி ஓரமாக வைப்பது நல்லது.
இதையும் படிங்க: children's day 2023: குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்களா.? பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியது.!