ஐதராபாத்: பொதுவாக பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்சிதை மாற்றம் காரணமாக அதிகரிக்கிறது. இந்த அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரத்தலும் குறைகிறது. பெரும்பாலும் பிரசவத்துக்கு பின் சர்க்கரை அளவு குறைந்து சமநிலை அடைந்து விடும். பலருக்கு தொடர வாய்ப்புள்ளது.
இதையே கர்ப்பகால நீரிழிவு நோய் என்கிறோம். இந்த நோயை கர்ப்பகாலத்தின் போது உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். அதாவது சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். இதுகுறித்து பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் Northwestern University நடத்திய ஆய்வில், பெண்கள் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு விளக்குகளை அணைப்பதன் மூலம் கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை குறைக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து Northwestern பல்கலைகழகத்தின் உதவி பேராசிரியர் மின்ஜீ கிம் கூறுகையில், தூங்குவதற்கு முன்பு கணினி மானிட்டர், ஸ்மார்ட்போன் திரைகள், எல்இடி விளக்குகளை பயன்படுத்தும் கர்ப்பிணிகள் மற்றும் பயன்படுத்தாத கர்ப்பிணிகளின் இடையே ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து வந்தோம். இதில் கர்ப்பிணிகளின் மாதாந்திர பரிசோதனை முடிவுகள், ரத்த பரிசோதனை முடிவுகளும் அடங்கும். இவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்து பார்க்கையில், 3 மணி நேரத்திற்கு முன் விளக்குகளை அணைக்காமல் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அளவு கர்ப்பகால நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது.
தூங்குவதற்கு முன்பு பிரகாசமான ஒளி பயன்பாடு உடலுக்கு நல்லதல்ல. மாலை நேர வெளிச்சத்தின் தாக்கம், கர்ப்பகால நீரிழிவு நோயை உருவாக்கும் என்பது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வெளிச்சம் வீட்டில் இருக்கும் அனைத்து வகையான விளக்குகள் மற்றும் டிவிகள், கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்களிலிருந்தும் வருகிறது. ஆகவே, இதனை கர்ப்பக்காலத்தில் தவிர்க்க வேண்டும். இது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
மறுபுறம் தூங்குவதற்கு முன்பு ஸ்கிரீனிங் நேரத்தை குறைக்கும் கர்ப்பிணிகளின் மாதாந்திர பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை முடிவுகள் கர்ப்பகால நீரிழிவு, இதய நோய் மற்றும் டிமென்ஷியா ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கிறது என்பதை கண்டறிந்துள்ளோம். ஆகவே, கர்ப்பிணிகள் மட்டுமல்லாமல் அனைவரும் உறங்கச் செல்வதற்கு 3 மணிநேரங்களுக்கு முன்பே விளக்குகளை அணைக்க முயற்சிக்கலாம் அல்லது மிகவும் மங்கலான விளக்குகளை பயன்படுத்தலாம்.
குறிப்பாக கணினி மற்றும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இருப்பினும் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால், திரைகளை முடிந்தவரை டிம் செய்துவிடுங்கள். தூக்கத்திற்கு முந்தைய ஒளி பயன்பாடு இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு குறைவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. இது அணைத்து பெரியவர்களுக்கும் பொருந்தும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் பரவும் H3n2 வைரஸ் காய்ச்சல்.. முக்கிய அறிகுறி தொண்டை வலி.. குழந்தைகளை தாக்கும் அபாயம்.