கரோனா பரவத் தொடங்கியது முதலாகவே, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் சுகாதாரத் துறையினர் முன் களப் பணியாளர்களாக களத்தில் இறங்கி நோயாளிகளைக் கையாள்வதற்கு பொதுமக்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று தொற்றுநோயைக் கண்டறிய சோதனை மேற்கொண்டனர். பரிசோதனை மாதிரிகளை சேகரிப்பது தொடங்கி கரோனா தடுப்பு நடவடிக்கையின் பிற செயல்பாடுகளுக்கு இவர்களே முதன்மையாக பயன்படுத்தப்பட்டனர்.
இத்தகைய சூழ்நிலையில், மோசமான சுகாதார உள்கட்டமைப்பு கொண்ட இந்தியா போன்ற நாடுகள் சுகாதாரத் துறையில் மகப்பேறு பிரிவு போன்ற முக்கிய சிகிச்சைப் பிரிவுகளுக்கு போதிய வசதிகள் இல்லாத பிரச்னையை எதிர்கொள்ள நேரிட்டது.
மகப்பேறு சுகாதார சேவைகளுக்கான வசதிகளில் ஏற்பட்ட பற்றாக்குறை கரோனா பரவலின் தொடக்கத்தில் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிரிழப்பு விகிதாச்சாரம் அதிகரிப்பில் பிரதிபலிக்கத் தொடங்கியது.
உலகளவில் 7 மில்லியன் வரை திட்டமிடப்படாத கர்ப்பங்கள் கரோனா பரவலின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவசர சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாததால் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மதிப்பிட்டுள்ளது.
யுனிசெஃப் (UNICEF) அறிக்கையின்படி, மார்ச் முதல் டிசம்பர் வரை இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
இதனிடையே, தொற்றுநோய் காலத்தின்போது கர்ப்பிணிகள் மற்றும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு மற்றும் சிகிச்சைகளில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இந்தியா கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அதே சமயத்தில், மகப்பேறு ஆரோக்கியத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்னைகளை சரி செய்வதும் அவசியமாகிறது.
என்ன மாதிரியான பிரச்னைகள்
கருத்தரிப்பதை உரிய நேரத்தில் கண்டறிய இயலாமை, தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் அதிகரிப்பது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண நாடு முழுவதும் பின்பற்றக்கூடிய உடனடி தீர்வுகள் தேவை என்பது உணர்த்துகிறது.
கரோனா போன்ற தொற்றுநோய்களின் பரவலின்போது மகப்பேறு ஆரோக்கியத்திற்கு தேவையான வசதிகள் இல்லாததால், கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண நாடு முழுவதும் பரந்த தொழில்நுட்ப தீர்வுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற சில புதுமையான தீர்வுகள் ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எடுத்துக்காட்டாக, சிறுநீரகவியல் நிபுணர் அபர்ணா ஹெக்டே உருவாக்கிய ஆரோக்யா சகி என்ற மொபைல் செயலி மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுகிறது. மருத்துவமனைகளை அணுக முடியாத தாய்மார்களுக்கு நோய்களை கண்டறிந்து மகப்பேறுக்கு முற்பட்ட கால பராமரிப்பு அளிக்க ‘ஆரோக்கிய சகி’ மூலம் ஆஷா தொழிலாளர்கள் உதவுகின்றனர்.
தாய் மற்றும் சேய் பிறப்பு- இறப்பு விகிதங்கள் அதிகமுள்ள மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் வசதி அடிப்படையிலான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற அஸ்மான் (ASMAN) என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் பெண் பிரசவத்திற்காக ஒரு சுகாதார மையத்தை அடைவதற்கான பயணம் பல சிக்கல்களை கொண்டது. அந்த சமயத்தில் கர்ப்பிணி பற்றிய மின்னணு தரவு பயன்பாடு, பிரசவத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதில் முக்கியமானதாக இருக்கும்.
இது போன்று நேரடி தகவல்கள் கிடைப்பது அதிக ஆபத்து உள்ள நிகழ்வுகளை அடையாளம் கண்டு நிர்வகிக்க உதவும். அதாவது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னர் இது குறித்து உயர்மட்ட பராமரிப்பு மையங்களுக்கு பரிந்துரைத்தல்; தேவைப்பட்டால் அவசர முடிவுகளை எடுத்தல் போன்றவற்றை சுகாதார ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லா நிகழ்வுகளையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவக்கூடும். நாடு முழுவதும் இது போன்ற தீர்வுகளை அமல்படுத்தினால் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.
தற்போதைய சூழ்நிலையில், ஆஷா திட்ட ஊழியர்கள், மக்கள் நல ஊழியர்கள் கர்ப்பிணிகளின் வீடுகளுக்கு சென்று பார்ப்பதற்கு ஏதுவாகவும், கர்ப்பிணிகளின் சிக்கல்களை முன்னரே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைப்பதும், அதன் தொடர் நடவடிக்கைகளை உறுதிசெய்வதும் அவசியம்.
தற்போதைய நவீன யுகத்தில் தொற்றுநோய்களின்போது சீரான தாய்வழி சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்கான திறனை மேம்படுத்த தொழில்நுட்பம் மூலம் பெறப்படும் தீர்வுகள் பயனுள்ளதாக இருக்கும்.
சுகாதார சேவை அல்லாத மற்ற வேலைகளின் பணிச்சுமையைக் குறைக்க கூடுதலாக பணியமர்த்தப்படும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இதற்கான பயிற்சிகளையும், அவர்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் இதைச் செய்யலாம். ஆனால் தாய் மற்றும் சேய் பராமரிப்பில் கோவிட்-19-க்கு திறமையான பயற்சி பெற்றவர்களின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க வேண்டும்.
தேசிய மற்றும் உள்ளூர் அளவில் சுகாதார தகவல் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு பாதுகாப்பு, பயன்பாடு, சுகாதார குறியீடுகள், நோய் கண்காணிப்பு, தரமான சேவை வழங்கலை கண்காணித்தல், அறிக்கை தயாரித்தல், போதுமான நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் ஆதாரங்கள் அடிப்படையில் முடிவெடுப்பதை ஊக்குவிப்பதற்கு தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்தலாம்.
இந்தியா கரோனாவை அதன் தற்போதைய சுகாதார உள்கட்டமைப்புடன் எதிர்கொண்டுவரும் நிலையில், நாடு முழுவதும் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலமாக தாய்மை சுகாதார சேவை தடையற கிடைப்பதை உறுதி செய்வதிலும் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
கட்டுரை ஆசிரியர் அமிதா தாணு. இவர் தற்போது இந்திய குடும்ப கட்டுப்பாடு சங்கத்தில் (FPA India) உதவி செயல்தலைவர் - திட்ட அமலாக்கம் (ASG-PI) என்ற திட்டங்கள் பிரிவுக்கு தலைவராக பொறுப்பில் இருக்கிறார்.
இதையும் படிங்க:கருவுறாமல் தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமா? - மகப்பேறு ஆலோசகர் டீனா விளக்கம் (பாகம்-1)