சிவகங்கை: சிவகங்கை பகுதியில் முதன்முறையாக கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களை தவிர்க்க தேங்காய் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தென்னை, பனை மரங்களின் அனைத்துப்பொருட்களுமே உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது. அதிலும் தற்போது புதிதாக தேங்காய்ப் பூக்களை கோடையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
கேரளாவில் மட்டும் விற்பனையாகி வந்த தேங்காய்ப்பூக்கள், தற்போது பொள்ளாச்சிப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு திருப்புவனத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு பூ 120 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த தேங்காய்ப்பூ நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும், மனஅழுத்தத்தைக் குறைக்கவும், குடல் நோய், கோடை வறட்சி, அல்சர், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாக்கும் என்ற அறிவிப்புடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் முன்னிலையிலேயே தேங்காயை உடைத்து பூக்களை வெளியில் எடுத்து சிறிது சிறிதாக நறுக்கித் தருகின்றனர். இந்நிலையில், தேங்காய்ப் பூ வியாபாரிகள், மார்ச் மாதத்தில் மட்டுமே இந்த வகை பூக்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், மக்கள் ஆர்வமுடன் இதை வாங்கிச் செல்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.