இரண்டு கண்களும் ஒரே நேர் திசையில் பார்க்க இயலாமல் வேறு வேறு திசையில் அமைந்திருக்கும் நிலையையே மாறுகண் குறைபாடு என்று அழைக்கிறோம். எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில், 30 விழுக்காடு நோயாளிகளுக்கு உள்ள ஒரு குறைபாடு மாறுகண். மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 0.2 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை மாறுகண் குறைபாடு வேறுபடுகின்றது.
கவலைக்குரியதா இந்த குறைபாடு?
அழக்குணர்ச்சியுடன் சேர்த்து நாம் இதனை அணுகும் போது, இந்த குறைபாடு கொஞ்சம் பிரச்னைக்குரியது தான்.
முப்பரிமாணம், தொலைநோக்குத் திறனை இழத்தல்
மாறுகண் குறைபாட்டிற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் குழந்தைகள் நாளடைவில், கண்களின் முப்பரிமாண திறனை இழக்கின்றனர். அதாவது நாம் காணுகின்ற காட்சியின் தூரத்தை உணரச் செய்கின்ற, ஆழத்தை உணர முடியாது.
காட்சிகளின் தூரத்தைப் பற்றிய துல்லியமான விழிப்புணர்வு அவசியமாகின்ற வாகனம் ஓட்டுதல், விளையாட்டு, விமானம் ஓட்டுதல் போன்ற துறைகளில் வேலைக்குச் சேரும் போதும், கைகளும் கண்களும் இணைந்து செய்யும் வேலைகளின் போது இந்த குறைபாடு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஒரு கண்ணை மூடிக்கொண்டு, ஊசியில் நூல் கோர்க்கும் போது, முப்பரிமாணத்தின் தேவையை நம்மால் உணர முடியும்.
கண் மந்தமடைதல்: நீண்ட நாட்களாக மாறுகண் குறைபாடுடன் இருக்கும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் மருத்துவச் சிகிச்சையளித்தாலும், நிரந்தரமாக கண் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இந்த நிலையை மந்தமான கண் எனக் கூறுவார்கள். சரியான நேரத்தில் மாறுகண் குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அது மந்த கண் குறைபாடுக்கு வழி வகுக்கும்.
மாறு கண் குறைபாடு ஒருவருக்குள், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை, சமூகத்தைப்பற்றிய எதிர்மறை எண்ணங்கள், சமூக வெறுப்பை உண்டாக்குதல், அடுத்தவர்களுடன் தொர்பு கொள்ளுவதில் தயக்கம், வேலை வாய்ப்பைப் பெறுவதில் தாமதம் போன்ற உளவியல் சிக்கல்கள் ஏற்படுத்தலாம்.
குறைபாடுக்கான காரணங்கள்
மாறுகண் குறைபாடு ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை.
குழந்தைகளுக்கு இந்த குறைபாடு பெரும்பாலும், ஒளிவிலகல் (கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்னை) குறைபாடுகளால் ஏற்படுகிறது. கண் தசை பலவீனம் காரணமாக மாறு கண்குறைபாடு ஏற்படலாம். அறுவை சிகிச்சை மூலமாக இதனை சரி செய்ய முடியும்.
மிகவும் அரிதாக பரம்பரைக் காரணமாகவும், நரம்பியல் பிரச்னைகள் மற்றும் தொற்று காரணமாகவும் மாறுகண் குறைபாடு ஏற்படுகின்றது.
குழந்தைகள் அலைப்பேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவைகளின் ஒளித்திரையை அதிக நேரம் பார்க்கும் பழக்கம் அதிகரித்து இருப்பதும் இந்த குறைபாடு ஏற்படுவதற்கான மறைமுகமான காரணிகளாகும்.
மாறுகண் குறைபாட்டை கண்டறிதல்:
சிலரிடம் உள்ள மாறுகண் குறைபாட்டைக் கண்டறிவது கடினமாகவே இருக்கிறது. பெரும்பாலன நேரங்களில், பார்வை மாறுபாடுகள் மூலமாக ஆரம்ப நிலையிலேயே இந்த குறைபாட்டைக் கண்டறிய முடியும்.
மாறு கண் குறைபாடு அடிக்கடியோ அல்லது நிரந்தரமாகவே இருக்கக்கூடும். நிரந்தரமான குறைபாட்டிற்கு உடனடியாக பரிசோதனையும், சிகிச்சையும் அவசியம். சில நேரங்களில் வழக்கத்தைவிட தலை பெரியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மாறுகண் குறைபாடு வர வாய்ப்புள்ளது. அவ்வாறான குழந்தைகள் இந்த குறைபாடு இருக்கும்.
குழந்தைகளுக்கான சிகிச்சைகளின் பலன்கள்:
1.முப்பரிமாணப்பாவையை சீர்செய்தல்
2.சராசரி தோற்றம்
மறுகாண் குறைபாடுக்கான சிகிச்சை
குறைபாடு இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும் பட்சத்தில், எந்தவித தயக்கமும் இன்றி, குழந்தைகள் கண்நோய் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு மாறுகண் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அதன் தன்மையைப் பொறுத்து, கண்ணாடி அணிதல், பயிற்சிகள், அறுவை சிகிச்சை மூலமாக அதனைக் குணப்படுத்த முடியும்.
சில வகை குறைபாடுகளை கண் கண்ணாடி அணிவதன் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும்.
அறுவை சிகிச்சை: இதற்கான அறுவை சிசிச்சை வெளிப்புறத்திலேயே நடைபெறுகிறது. அதாவது, இந்த அறுவை சிகிச்சை பார்வை அச்சு மற்றும் கருவிழிகளை அசைக்கும் தசைகளுடன் தொடர்புடையது இல்லை. இதனால், மாறுகண் குறைபாடு அறுவை சிகிச்சையால் கண்பார்வை போய்விடும் என்ற அச்சம் தேவையில்லை; சிகிச்சைக்கு பின்னர் நல்ல பலனும் கிடைக்கின்றது.
மாறு கண் குறைபாடு அதிர்ஷ்டத்தின் அடையாளம் இல்லை.
குழந்தைகளுக்கு குறைபாடு இருப்பது தெரிந்தால் தயக்கம் காட்டாமல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுங்கள். சிகிச்சை குழந்தையின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
எப்போது சந்தேகம் கொள்ள வேண்டும்: அசாதாரணமான கண் விலகல் பிரச்னை, கண்பார்வை ஒருங்கிணைப்பில் கோளாறு, தொலைக்காட்சி பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் போது வழக்கத்துக்கு மாறாக தலையை சாய்த்து வைத்து பார்த்தல் போன்றவை மாறு கண் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
மாறு கண் குறைபாடு, தீவிரமான நரம்பியல் பிரச்னை மற்றும் உயிருக்கு ஆபத்தான கண்புற்று நோயாக மாற மிக அரிதாக வாய்ப்புள்ளது.
எனவே தயக்கம் காட்ட வேண்டாம். உடனடியாக கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
இதையும் படிங்க: கரோனா மூன்றாவது அலை: நம் குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள்!