டெல்லி: துரித உணவு மட்டும் அல்ல வாழ்கையும் துரிதமாக மாறிவிட்டது. இந்த சூழலில் மனிதர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை உடல்நலன் மட்டுமா? எனக்கேட்டால் அது கிடையாது. நம்மில் பலர் மனசு ஏனோ சரி இல்ல.. வாழ்க்கையே வெறுத்துப்போச்சு, ரோம்ப ஸ்ட்ரஸ்ஸா இருக்கு என சொல்லியும் இருப்போம், பிறர் சொல்லவும் கேட்டிருப்போம். இது எதனால் என்று என்றாவது சிந்தித்தது உண்டா? இது குறித்து டெல்லியை சேர்ந்த உளவியல் நிபுணர்களான மருத்துவர்கள் நந்த குமார் மற்றும் அஸ்தானா ஆகியோர் கூறிய சில ஆய்வு ரீதியான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மனநல பிரச்சனை உலக அளவில் இருந்தாலும் இந்தியாவில் இது நாளுக்கு நாள் பெருகி வரும் சமூக நோயாகவே மாறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் மனநல பாதிப்பு என்பது கவலை அளிக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்கிறார் மருத்துவர் நந்த குமார்.
மனநல பாதிப்புகள் வருவதற்கான காரணங்கள்.!
மூட நம்பிக்கைகும் மனநல பிரச்சனைக்கும் தொடர்பா? இளம் பருவத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சொல்ல முடியாத பிரச்சனைகள் இருக்கும். நண்பர்களுடன் சண்டை, காதல் தோல்வி, படிக்கும் இடத்திலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ ஏற்படும் பிரச்சனை என அடுக்கிக்கோண்டே போகலாம். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நபர்கள் இதை பெற்றோரிடம் கூறும்போது அவர்களும் பேய் பிடித்துவிட்டது, மந்திரிக்க வேண்டும் என்று என்னென்னவோ கூறி மனநலத்தை மேலும் பாதிப்படைய செய்யும் சூழலும் இருக்கத்தான் செய்கிறது. மறுபுறம் பெற்றோர் அந்த பிரச்சனைகளை சரிவர அணுகாமலும் விடுவது உண்டு. இதுபோன்ற சூழலில் இளைஞர்கள் மனநல பிரச்சனைகளை அதிகப்படியாக எதிர்கொள்கின்றனர்.
டிஜிட்டலில் மூழ்கிப்போகும் சூழல்; இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட பலரும் இன்றைய காலத்தில் டிஜிட்டல் உலகில் மூழ்கி கிடக்கின்றனர். மொபைல் ஃபோன் பயன்பாடு, ஆபாச படங்களை பார்ப்பது, போதிய உறக்கமின்மை, போதை பழக்கத்திற்கு அடிமையாவது உள்ளிட்ட பல தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்வதன் மூலம் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தங்கள் பிரச்சனைகள் குறித்து மனம் விட்டு மற்றவரோடு பேச மறந்து விடுகின்றனர்.
மனநல பிரச்சனை ஏற்பட்டால்..அதன் அறிகுறிகள்.!
- தூக்கமின்மை
- லேசான பதட்டம்
- மன அழுத்தம்
- கோவம்
- எரிச்சல்
- தனிமையை தேடுவார்கள்
- தொடர்பின்றி பேசுதல்
உள்ளிட்ட பல உளவியல் பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார் எய்ம்ஸ் மனநல மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் நந்த் குமார் கூறுகிறார். ஆனால் மக்கள் உடல் ரீதியான பிரச்சனைகளை வெளிப்படுத்தும் அளவுக்கு மன ரீதியான பிரச்சனைகளை வெளிப்படுத்த தயங்குகின்றனர். இது ஆரோக்கியமான சமூகத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மனநலப் பிரச்சனை குறித்து வெளிப்படுத்த தயக்கம்: மனநோயாளி என முத்திரை குத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் பலர் சிகிச்சைபெற முன்வருவது இல்லை எனக்கூறும் மருத்துவர் சிருஷ்டி அஸ்தானா, சூழல் ரீதியாக நிகழும் மற்ற பிரச்சனைகளையும் எடுத்துக்கூறியுள்ளார். அதாவது மனநலன் தொடர்பான சிகிச்சை பெற்றுக்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அதிகம் மனநல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சாதாரண மக்களால் இந்த கட்டணத்தை செலுத்தி சிகிச்சைபெற முடிவதில்லை எனக்கூறியுள்ளார். மறுபுறம் அரசு மருத்துவமனைகளில் உளவியல் சிகிச்சைக்கு போதுமான மருத்துவர்கள் இல்லாததால் இருக்கும் மருத்துவர்களை வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது கூட்டம் அலைமோதும் நிலையில் பெரும்பாலான மக்கள் இதை தவிர்க்க நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
மனநலன் பற்றிய விழிப்புணர்வு; மக்கள் மத்தியில் மனநலன் பற்றிய விழிப்புணர்வு இந்த காலகட்டத்தில் அதிகம் தேவை படுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்களான மருத்துவர்கள் நந்த குமார் மற்றும் அஸ்தானா ஆகியோர். மனநலம் குறித்தான உளவியல் சிக்கல்களை புரிந்துகொள்ள உளவியல் ரீதியான சிகிச்சையோ, விழிப்புணர்வோ மட்டும் போதாது எனவும் உடல் மற்றும் மனம் இரண்டிற்கும் பொதுவான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு கல்வி தேவை எனவும் கூறுகின்றனர். மேலும், மன ரீதியாக பாதீக்கப்பட்டவர்கள் தகுந்த நேரத்தில் மருத்துவ உதவியை நாட தயக்கம் கொள்ள வேண்டாம் எனவும், உரிய சமயத்தில் கிடைக்காத உதவி காலம் தாழ்ந்து கிடைத்தால் அதில் எந்தவித பயனும் இல்லை எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
விழிப்புணர் திட்டத்தின் அவசியம்: குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விரிவான சுகாதாரம் தொடர்பான விவாதங்கள் தேவை. மாணவர்கள் மத்தியில் எழக்கூடிய பிரச்னைகளை கண்டரிந்து அதனை புரிந்துகொள்ள ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பயிற்சி அளிக்கப்படவேண்டும். மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சுகாதாரம் மற்றும் கல்வியை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் மருத்துவர்கள் நந்த குமார் மற்றும் அஸ்தனா ஆகியோர் கூறியுள்ளனர். அதேபோல, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உடல் நல ஆரோக்கியத்திலிருந்து மனநல ஆரோக்கியத்தை பிரிக்க முடியாது, இரண்டும் சேர்ந்ததுதான் ஆரோக்கியமான வாழ்க்கை என்பதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு திட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் அடிமையா நீங்கள்? தப்பிக்க வழி உள்ளது..