”நாம் அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால் நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவைகள் தான். ஆகையால், நமது மனவலிமையும் உடல்வலிமையும் ஒன்றையொன்று பாதிக்கக்கூடும். இவ்விரெண்டும் ஒரே சீரில் இருக்க வேண்டும். இதை விதிமுறைகள் என்று கூறுவதை விட வாழ்க்கை முறை எனக் கூறுவதே சரியாக இருக்கும்” எனக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ’யஷ் வர்தன் சுவாமி’.
நாம் தினமும் சாலட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என அவசியம் இல்லை. நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகிய சத்துக்கள் கிடைக்கும் வண்ணம் உணவு எடுத்துக்கொண்டாலே போதுமானது. நாம் தினமும் எடுக்கும் உணவுகளின் கலோரிகளை நாம் சரியாக கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
நாம் எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் சரி, ஒரு நாளில் எவ்வளவு கலோரி எடுத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம். நமது உடல் 50-60 சதவீதம் நீரால் ஆனது. ஆகையால், ஆரோக்கியத்திற்கு, மூளை செயல்பாட்டிற்கும் போதுமான அளவு நீர் அருந்துவதும் அவசியம்.
வாரத்திற்கு 3 - 5 முறை வரை உடற்பயிற்சி செய்வதே நம் உடல் வலிமைக்கும், மனவலிமைக்கும் சிறந்தது. நமக்கு ஏற்ற எந்த விதமான உடற்பயிற்சிகளை வேண்டுமென்றாலும் நாம் பின்பற்றிக்கொள்ளலாம். அத்துடன் தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அடிகள் வரை நடப்பதையும் சேர்த்துக்கொள்வதே மிகச்சிறந்தது. அடுத்தபடியாக தினமும் 7அரை மணிநேரம் தூங்குவது நமக்கு எடை குறைப்பு, மூளை செயல்பாடு போன்றவைகளுக்கு உதவும். மேலும், பசி, உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றிலிருந்தும் விலக உதவும்.
அடுத்தது, மன அழுத்தத்தை கையாளுவதும் முக்கியமானப் பங்கு வகுக்கிறது. அதை நாம் சரியாக கையாளும்பட்சத்தில் நம்மால் சரியாக நமது இலக்குகளை அடைய முடியும். ஒரு விஷயத்தை நாம் என்றுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், “நமது எண்ணங்கள் தான் நம் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும்”. ஆகையால், நமது மனதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதற்கு தினமும் தியானம் செய்வது அவசியம்.
இறுதியாக, சுற்றுச்சூழல் மற்றும் தினசரி மேலாண்மை மிக முக்கியம். அதைப்பொறுத்தவரை, அதற்கான விஷயங்கள் அனைத்தும் நம்மைச் சுற்றியே உள்ளன.
உணவிலிருந்து நாம் சமூக வலைதளங்களில் யாரைப் பின்தொடர்கிறோம் என்பது வரை நம்மைச் சுற்றியே உள்ளது. நாம் நமது சுயவளர்ச்சிக்காக நேரங்கள் ஒதுக்குகிறோமா..? தினமும் பயனுள்ளதாக செயல்பட முயற்சி செய்கிறோமா..? என்பது கேள்விக்குறி தான். அதற்கு நாம் தினசரி காலையில் சில நேரமும், தூங்குவதற்கு முன் சில நேரங்களும் ஒதுக்கிக்கொள்வது நன்று.
இதையும் படிங்க: குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கிறதா!- அதிர்ச்சி ரிப்போர்ட்!