விலங்கு, மனிதன், தாவரம் போன்ற எதுவொன்றாக இருந்தாலும் அந்த உயிரினத்தின் தன்மை, நடத்தை, அமைப்பு அவற்றின் டி.என்.ஏ.வால் (டிஆக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம்) மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. அதேபோல ஒரு வைரசின் உருவாக்கம் அதன் ஆர்.என்.ஏ.விலிருந்து (ரிபோநியூக்ளிக் அமிலம்) கண்டறியப்படுகிறது.
இது மனித உடலில் அதன் தாக்குதலின் தன்மையைக் கண்டறியவும் உதவுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் தீநுண்மிக்கு எதிராக வினையாற்றும் தடுப்பூசியை உருவாக்க முடியும்.
இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் குஜராத் உயிரி தொழில்நுட்பம் ஆராய்ச்சி மையத்தால் கோவிட்-19 வைரசின் மரபணுக்கள் ஆராயத் தொடங்கப்பட்டது. ஒரு மாதத்திற்குள்ளாக குறித்த மரபணு ஆய்வுச் சோதனையில் வெற்றியும் அடைந்துள்ளது.
கரோனா வைரசின் மரபணுக்களை ஆராய்ந்ததோடு மட்டுமல்லாது, அதனின் மூன்று வகையான மாற்றங்களையும் இந்தச் சோதனையில் ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சாதனை. இந்திய ஆராய்ச்சி மையத்தின் இந்த மரபணு சோதனை முடிவுகள் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கான தடுப்பூசி அல்லது மருந்தை உருவாக்க பயனுள்ளதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வின் அடுத்தக்கட்டம், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என தீநுண்மி ஆராய்ச்சியாளர்கள் வட்டாரம் கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த குஜராத் உயிரி தொழில்நுட்பம் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சைதன்யா ஜோஷி, “உலக சுகாதார நிறுவனத்தால் மார்ச் 11 அன்று உலகளாவிய பெருந்தொற்றுநோயாக கோவிட்-19 கரோனா வைரஸ் அறிவிக்கப்பட்டது. சீனாவின் வூகான் மாநகரத்திலிருந்து பரவத்தொடங்கி உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸிற்கான தடுப்பூசி, மருந்துகள் உலகம் முழுவதும் உள்ள 396 ஆய்வகங்களிலும் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு உள்ளன.
மேலும், ஆராய்ச்சிகள் தொடரும் நிலையில் கோவிட்-19 வகை வைரசானது இந்த நான்கு மாத காலகட்டத்திற்குள்ளாக ஆறு மாற்றங்களைக் கண்டிருப்பதாக அவற்றின் மீதான முடிவுகள் வெளிப்பட்டுள்ளன. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக வேகமாகப் பரவுகிறது.
கரோனா வைரஸ் மனித உடலில் எவ்வாறு நுழைகிறது, நுரையீரல் உள்ளிட்ட மனித உடலின் பிற பகுதிகளை எவ்வாறு தாக்குகிறது, என்பதைக் கண்டறிய இந்த ஆராய்ச்சி முடிவு உதவும். இதுபோன்ற பகுப்பாய்வு முன்னெடுப்பதில் இந்தியாவில் உள்ள வேறு எந்த ஆய்வகமும் இதுவரை வெற்றிபெறவில்லை” எனத் தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசியை உருவாக்கும் சவால் நிறைந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திவரும் சூழலில் இந்திய உயிரியியல் அறிவியலாளர்களின் இந்த முன்னெடுப்பு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க : ஆதரவற்றோருக்கு தலா ஆயிரம் ரூபாய் - உ.பி., அரசு அறிவிப்பு