அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 13 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 465க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இணைப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட முன்வடிவு இன்று (செப்டம்பர் 16) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், ''பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை தொடங்கினால் அது காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும். 1985இல் விருதுநகர் மாவட்டம் பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அரசு பல்கலைக்கழகம் என்றும் எதுவும் தொடங்கப்படவில்லை.
மேலும் இம்மாவட்டத்தில் 1977இல் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். தமிழ்நாடு முதலமைச்சரான வரலாற்றுச் சிறப்பும் உண்டு.
மேலும் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு, நெசவு மற்றும் விவசாய கூலித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள விருதுநகர் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியை தொடங்குவது கூலித் தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் உயர்கல்வி பயில அதிக வாய்ப்பைக் கொடுக்கும். அதோடு, தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு சான்றிதழ் பதிவு செய்ய கால நீட்டிப்பு: தரவரிசைப் பட்டியல் 25ஆம் தேதி வெளியீடு