ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சி தான் தொல்லை இல்லாத, பிறரை கெடுக்காத, கட்டப்பஞ்சாயத்து செய்யாத ஆட்சி. பெண்களை கிண்டல், கேலி செய்யாத ஆட்சி வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும்.
முதலமைச்சரின் தாயாரை இழிவாக பேசி, பிறரை துன்புறுத்தி அதில் இன்பம் காணக்கூடிய கட்சி திமுக. முதலமைச்சர் கண் கலங்குவதை பார்த்து நானும் கண் கலங்கினேன். ஆகவே, இப்படிப்பட்ட திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இனி தலை எடுக்கவே கூடாத வகையில் நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும்.
25 வருட அரசியல் வாழ்க்கையில் நான் பெரிய அளவில் சொத்து ஏதும் சேர்க்கவில்லை. 14 வயதில் பிடித்த அதிமுக கொடியை தற்போது வரை விடவே இல்லை. என்னை பதவியை விட்டு இறக்கிய போது கூட தலைமை சொல்படியே கேட்டேன். எனவே, வரும் நான்காம் தேதி வரை சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. அதை சிறப்பாக செய்யுங்கள். உங்களுக்கு வரவேண்டியது வந்து சேரும்” என்றார்.
இதையும் படிங்க: இனி யாருடைய நிலமும் அந்நியரால் அபகரிக்கப்படாது!