விருதுநகர் காசுக்கடை பஜாரில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் ஏழு கடைகள் செயல்பட்டுவருகின்றன. அந்தக் கடைகளுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சக்திவேல் சொத்துவரி செலுத்தாமல் இருந்துள்ளார்.
நிலுவைத்தொகை ரூ.51 ஆயிரத்து 660-ஐ கட்டும்படி நகராட்சி நிர்வாகத்தில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் சக்திவேல், வரி கட்டாமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில், சக்திவேலுவுடைய 7 கடைகளுக்கு விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமையிலான குழுவினர் ஏழு கடைகளுக்கு சீல் வைத்தனர்.
பின்னர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி நீண்ட காலமாக நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையும் ஜப்தி நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.
நகராட்சியில் பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கும், நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியங்களை வழங்குவதற்கும் தேவையான நிதிநிலை குறைவாக உள்ளதால் தீவிர வரி வசூலில் இறங்கியுள்ளோம்.
நீண்ட காலமாக நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்பு ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்தாண்டு ரூ.13 கோடி நிலுவையில் இருந்தது. அதில், தற்போது ரூ.9 கோடி வரை வசூல் செய்துள்ளோம்" என்றார்.