விருதுநகர்: சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர் பாலித்தீன் பை தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தில் பணிபுரிய வட மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் மூலமாக தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நவீன் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொழிலாளர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்காமல் இருந்துள்ளதாகவும், இது குறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாலித்தீன் நிறுவனத்தில் ஆய்வு
இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. ஆட்சியர் உத்தரவின்பேரில் சார் ஆட்சியர் தலைமையில் பாலித்தீன் நிறுவனத்தில் ஆய்வுமேற்கொண்டனர். இதில், நிறுவன உரிமையாளர் ஊதியம் வழங்கியதும், ஊதியத்தை அவர்களிடம் நவீன் கொடுக்காமல் இருந்ததும் தெரியவந்தது.
கொத்தடிமைகளாகவும், குழந்தைத் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்த பிகார், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 14 பேரை மீட்டு அரசு குழந்தைகள் காப்பகத்தில் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார். மேலும், நவீன் என்பவரைக் கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சொந்தத் தேவைக்குப் பேருந்தில் சென்றால் காவலர்கள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும்'